சிங்கப்பூர் உயிர்மெய் பதிப்பகத்தின் ஏற்பாட்டில் மூத்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய ‘சிங்கப்பூர்க் கதம்பம் 3.1’ சிறுகதைத் தொகுப்பு நவம்பர் 4ஆம் தேதியன்று தேசிய நூலகக் கட்டடத்தின் இமேஜினேஷன் அறையில் வெளியிடப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர்க் கிளை ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் முனைவர் மு.அ.காதர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன் நூலினைப் பெற்றுக்கொண்டு தலைமையுரை வழங்கினார்.
இவ்விழாவில் உயிர்மெய் பதிப்பகத்தின் சார்பில் மூத்த தமிழறிஞர் சுப.திண்ணப்பன் அவர்களுக்கு ‘சிங்கைத் தமிழ்க் கடல்’ விருதும், முனைவர் ந.செல்லகிருஷ்ணன் மற்றும் முனைவர் க.இராஜகோபாலன் ஆகியோருக்கு ‘செந்தமிழ்க் கலாநிதி’ விருதும் வழங்கப்பட்டது. மேலும், எழுத்தாளர்கள் முனைவர் மு.அ.காதர், திரு. நா.ஆண்டியப்பன், திரு. மா.இளங்கண்ணன், திரு. இராம. கண்ணபிரான், திருமதி கமலாதேவி அரவிந்தன், திரு. க.து.மு. இக்பால், முனைவர் ஹெச். முஹம்மது சலீம், திருமதி நூர்ஜஹான் சுலைமான், திரு. பொன். சுந்தரராசு, திரு. மா.அன்பழகன், முனைவர் மா.ராஜிக்கண்ணு, திரு. செ.ப.பன்னீர்செல்வம், திரு. யூசுப் ரஜித் ராவுத்தர், திரு. இராம.வயிரவன், முனைவர் இமாஜான், திரு. எம்.சேகர், முனைவர் முஹைதீன் ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்தி ‘செந்தமிழ்ச் செம்மல்’ விருதுப் பட்டயம் மற்றும் நூல்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
இந்நூலின் தொகுப்பாசிரியர், பதிப்பாளர், எழுத்தாளர் மில்லத் அகமது நெறியாளராக இருந்து, வரவேற்புரை, நன்றியுரை வழங்கினார். வந்திருந்த அனைவருக்கும் சிங்கப்பூர்க் கதம்பம் 3.1 நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

