உடைந்த பீர் போத்தலால் மற்றொருவரைத் தாக்கிய ஆடவர்

உடைந்த பீர் போத்தலால் மற்றொருவரைத் தாக்கிய ஆடவர்

2 mins read
a71099a7-9800-41f5-a405-b567a8b71c5f
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடைந்த பீர் போத்தலால் மற்றொருவரைத் தாக்கியதற்காகவும் தனது தாயாரின் காதலர் மீது சிறுநீர் கழித்ததற்காகவும் 32 வயது ஹராய் கிருஷானா மனோகரனுக்கு செவ்வாய்க்கிழமை 22 மாதங்கள், 12 வாரங்கள் சிறையுடன் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.

ஆபத்தான ஆயுதம் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்தது, பொதுத் துறை ஊழியர் தனது பணியைச் செய்யவிடாமல் முரட்டுத்தனமாகத் தடுத்தது, தொல்லை கொடுத்தல் ஆகியவை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக நிரூபணமாயின.

இதுபோன்ற மேலும் ஒன்பது குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.

ஒரு குண்டர் கும்பல் உறுப்பினரான ஹராய், 37 வயதுடைய இன்னொருவரை தமது கும்பலில் சேர்த்துகொள்ள 2021, ஏப்ரல் மாதம் முயன்றார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அந்த நபர் மறுக்கவே, ஹராயும் அவரது நண்பர்களான 35 வயது சுப்பிரமணியமும் 31 வயது ஸ்டீவன் பிலிப் ராமலிங்கமும் ஆத்திரமடைந்தனர். ஹரான் ஒரு கண்ணாடி பீர் போத்தலை உடைத்து அதை அந்த நபரின் கழுத்துக்கருகே கொண்டு சென்றார்.

அதைத் தடுக்க அந்த ஆடவர் முயன்றபோது, அவரது வலது கையில் கடுமையான வெட்டுக் காயம் ஏற்பட்டது.

“தனது கையிலிருந்து ரத்தம் பீறிட்டதையும் உள்ளிருந்த சதை வெளியே தென்பட்டதையும் பார்த்த அந்த ஆடவர் மயங்கி விழுந்தார்,” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கிளேடிஸ் லிம் தெரிவித்தார்.

காயமடைந்த ஆடவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ஒன்பது மாதம் மருத்துவமனை விடுப்பு கொடுக்கப்பட்டது. மேலும் அவரது வலது கையில் அசைவுகளில் பாதிப்பு தென்பட்டது என்றும் வழக்கறிஞர் லிம் விவரித்தார்.

2021, ஜூலையில் தனக்கும் தன் காதலிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுத்த தனது தாயாரைக் குத்தினார் ஹராய். தட்டிக் கேட்க வந்த தாயாரின் காதலரின் முகத்தில் சில குத்துகளை விட்டார் அவர். பின்னர் தாயாரின் காதலர் மீது ஹராய் சிறுநீர் கழித்தார்.

ஹராய், தனது கருணை மனுவில், தனது செயல்களுக்கு வருந்துவதாகவும் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் மாவட்ட நீதிபதி கிறிஸ்டஃபர் கோவிடம் தெரிவித்தார். மேலும் தான் தன் தாயாரைக் காப்பாற்ற பாதுகாவலர் நிர்வாகப் பயிற்சி எடுத்து வருவதாகவும் தனது விடுதலைக்குப் பிறகு குற்றச்செயல்களிலிருந்து ஒதுங்கி வாழ உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்