சிங்கப்பூரின் முன்னோடிப் பத்திரிகையாளர்களில் ஒருவரான, தமிழ் முரசு நாளிதழின் திரு எம்.கே.ருஷ்யேந்திரன் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 68.
கடந்த இரு வாரங்களாக உடல்நலம் குன்றியிருந்த திரு ருஷ்யேந்திரன் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக அவருடைய சகோதரர் திரு அஜாதசத்துரு தெரிவித்தார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவரான திரு ருஷ்யேந்திரன் முதுகலைப் பட்டதாரி. கடந்த 1981ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வந்த அவர், அப்போது முதல் தமிழ் முரசு நாளிதழில் பணியாற்றி வந்தார். ஓய்வுபெற்ற பின் இந்தியா திரும்பிய அவர், அங்கிருந்தவாறே தமிழ் முரசு நாளிதழுக்குத் தொடர்ந்து பங்களித்து வந்தார்.
நாற்பதாண்டுகளுக்கும் மேல் செய்தித் துறையில் அனுபவம் கொண்டவரான திரு ருஷ்யேந்திரன், எப்போதும் அர்ப்பணிப்புமிக்க பணியாளராகத் திகழ்ந்து வந்தார்.
செய்திகளைக் கோர்வையுடன் சுருக்கமாகவும் விரிவாகவும் தெளிவாகவும் விரைவாகவும் எழுதுவதில் வல்லவரான இவர், இளம் பத்திரிகையாளர்களுக்கு ஆசானாகவும் முன்மாதிரியாகவும் விளங்கி வந்தார்.
எதனையும் துல்லியமாகவும் அனைவர்க்கும் எளிதில் புரியும்படியாகவும் மொழிபெயர்ப்பதில் இணையற்றவராகத் திகழ்ந்த இவர், புதுச் சொல் உருவாக்கத்திலும் கைதேர்ந்தவர்.
கொவிட்-19 தொற்றுக் காலத்தில் ‘Cruise to nowhere’ என்ற பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதற்கு மகிழ்உலாக் கப்பல் என்று தமிழில் அழகிய சொல்லை ஆக்கி அளித்தவர் இவர்தான்.
அரசியல், பொருளியல், உலக நடப்புகள் உட்பட அனைத்து வகைச் செய்திகளையும் தலையங்கம், சிறப்புக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றையும் செம்மையாக எழுதுவதில் கைதேர்ந்தவர் இவர்.
தமிழ் முரசு வாசகர்கள் பலரையும் கவர்ந்த ‘சோழபுரம் சிவகளை’ என்ற வரலாற்றுத் தொடரை எழுதிய இவர், அதனை நூலாக வெளியிடவும் திட்டமிட்டிருந்தார்.
அண்மைக்காலமாக இவர் எழுதி வந்த ‘சனிக்கிழமை ஒரு சாமானியர்’ தொடருக்கு வாசகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. அத்தொடர் பின்னர் ‘ஞாயிறு நாயகன்’ எனப் பெயர் மாற்றம் பெற்று, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகி வந்தது.
திரு ருஷ்யேந்திரனுக்கு மனைவியும் இரு மகள்களும் இருக்கின்றனர். அவரது இறுதிச்சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை 19ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெறவுள்ளது.


