வர்த்தக ஒப்பந்தங்கள் எளிதில் எட்டக்கூடியவை அல்ல: பிரதமர் லீ

வர்த்தக ஒப்பந்தங்கள் எளிதில் எட்டக்கூடியவை அல்ல: பிரதமர் லீ

2 mins read
a8864000-7e98-44f5-a09f-df880588f786
சான் பிரான்சிஸ்கோ நகரில் ஏபெக் உச்சநிலை மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் லீ சியன் லூங். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சான் பிரான்சிஸ்கோ: வர்த்தகம் முக்கியமான அம்சம்; ஆனால் வர்த்தகக் கொள்கை கடினமானது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முக்கியமான ஆசிய-பசிபிக் பொருளியல் முயற்சி எதிர்பாராத முட்டுக்கட்டையை எதிர்கொண்டதை அடுத்து அவரது கருத்து வெளியாகியுள்ளது.

உலகப் பொருளியலின் வாழ்வாதாரமாக விளங்குவது வர்த்தகம் என்று கூறிய திரு லீ, ‘ஐபிஇஎஃப்’ எனப்படும் வளப்பத்துக்கான இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கும் இந்த வட்டாரத்தில் அமெரிக்காவின் பொருளியல், உத்திபூர்வ ஈடுபாட்டிற்கும் அந்த வர்த்தகம் எனப்படும் தூண் முக்கிய அங்கம் என்றார்.

‘ஐபிஇஎஃப்’ கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 14 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் லீ உரையாற்றினார்.

“வர்த்தகக் கொள்கை தொடர்பில் புதிய, புத்தாக்க அணுகுமுறைகளை உருவாக்குவது எளிதன்று. முக்கிய அம்சங்களைக் கவனத்தில் கொண்டு பணியாற்றுவதற்கும் ஒப்பந்தத்திற்குக் கடப்பாடு தெரிவிப்பதற்கான சரியான தருணத்தைத் தேர்ந்தெடுக்கவும் நேரம் பிடிக்கும்,” என்று அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் பைடன், சென்ற ஆண்டு ‘ஐபிஇஎஃப்’ கட்டமைப்பு குறித்து அறிவித்தார். வர்த்தகம், விநியோகச் சங்கிலி, தூய எரிசக்தி, ஊழல் எதிர்ப்பு ஆகியவை அதன் நான்கு தூண்கள்.

ஏபெக் உச்சநிலை மாநாட்டிற்கிடையே, அவற்றில் மூன்று தூண்கள் தொடர்பில் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.

ஆனால் 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் திரு பைடனின் ஜனநாயகக் கட்சியினர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால், வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் சாத்தியமாகவில்லை.

அடுத்த ஆண்டு நடைபெறும் சந்திப்புகளில் இதன் தொடர்பில் கூடுதல் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகத் திரு லீ தமது உரையில் குறிப்பிட்டார்.

விநியோகச் சங்கிலி மீள்திறன், தூய எரிசக்தி, நியாயமான பொருளியல் ஆகியவை தொடர்பான புத்தாக்கமிக்க ஒப்பந்தங்களை சிங்கப்பூரர்கள் வரவேற்பதாக அவர் கூறினார்.

வர்த்தகங்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான வர்த்தக, முதலீட்டுச் சூழலை மேம்படுத்த இந்த ஒப்பந்தங்கள் உதவும் என்றார் திரு லீ.

‘ஐபிஇஎஃப்’ கட்டமைப்பு தொடர்ந்து வெளிப்படையானதாகவும் புதிய உறுப்பினர்களைப் பொறுத்தமட்டில் நீக்குப்போக்குடன் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் திகழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரதமர் லீவர்த்தகம்ஒப்பந்தம்