வேலைதேடுவோருக்கு உதவ புதிய இணையத்தளம் அறிமுகம்

வேலைதேடுவோருக்கு உதவ புதிய இணையத்தளம் அறிமுகம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2023 - 5:14 pm

2 mins read

வேலை தேடுவோர், வேலைக்கு உள்ள தேவை மற்றும் தேவைப்படும் திறன்கள் குறித்த நுண்ணறிவைப் பெற புதிய இணையத்தளம் தொடங்கப்பட்டு உள்ளது.

go.gov.sg/sdfe-dashboard என்னும் அந்த தளத்தை ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்பு வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.

வேலை நிலவரம் குறித்த விவரங்களை வேலை தேடுவோர் இந்த இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்பு தனது வேலைச் சந்தை பகுப்பாய்வுகளுக்குப் பயன்படுத்திய தரவுகளை இணையத்தளத்தில் பகிர்ந்துகொள்வது இதுவே முதல் முறை.

குறிப்பிட்ட சில வேலைகளுக்கு ஆள் எடுக்கும் தொழிற்கூடங்கள் பற்றிய விவரத்தையும் வேலை எண்ணிக்கையையும் புதிய இணையத்தளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

வேலைதேடும் தனிப்பட்டவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வேலைகளை வழங்கும் வெவ்வேறு துறைகளின் தலைசிறந்த நிறுவனங்களையும் இதில் தேடி தெரிந்துகொள்ளலாம்.

அத்துடன், ஒவ்வொரு வேலைக்கும் தேவைப்படும் திறன்கள் பற்றியும் அதில் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

அதனால், நிறுவனங்களுக்குத் தேவைப்படும் திறன்களை அறிந்து அதற்கேற்றவாறு திறன் மேம்பாடுகளைச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க வேலைதேடுவோருக்கு இந்த இணையத்தளம் உதவும்.

மேலும், ஒவ்வொரு வேலைக்கும் தரப்படும் சம்பள விவரங்களையும் அந்த இணையத்தளம் கொண்டிருக்கும். அதனால், வேலைதேடுவோர் தாங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்துக்கு ஏற்றவாறு வேலைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

இந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ள தரவுகள் 2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முதல் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டு வரை திரட்டப்பட்டன.

இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட 4.9 மில்லியன் வேலைகள் தொடர்பான தரவுகள் அவை. இந்தத் தரவுகள் ஒவ்வொரு காலாண்டுக்கும் புதுப்பிக்கப்படும்.

தனியார் துறைகள் மட்டுமின்றி அரசாங்கத் துறைகளிலும் உள்ள வேலை தொடர்பான தரவுகள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கும்.

புதிய இணையத்தள வசதிகள் குறித்து ‘ரேண்ட்ஸ்டாட் ஏஷியா-பசிபிக்’ வேலை நியமன நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி ஜெயா தாஸ் கருத்துத் தெரிவித்தார்.

ஆட்குறைப்பு செய்யப்பட்டோருக்கும் திறன் குறைவு காரணமாக வேலை கிடைக்காமல் இருப்போருக்கும் புதிய இணையத்தளத்தில் உள்ள தகவல்கள் பலனளிக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்