சிங்கப்பூரின் முதல் நகர்ப்புற கொள்கலன் மீன் பண்ணை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
2030க்குள் சிங்கப்பூர் அதன் உள்நாட்டு உணவுத் தேவையில் 30 விழுக்காட்டைப் பூர்த்தி செய்வதில் உள்ளூர் நகர்ப்புற விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அப்பண்ணை தொடங்கப்பட்டுள்ளது.
தெம்பனிஸ் ரவுண்ட் சந்தை, உணவு நிலையத்துக்குப் பக்கத்தில் தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் கொள்கலன் மீன் பண்ணை அமைந்துள்ளது.
தெம்பனிஸ் நகர மன்றத்துக்குப் பக்கத்தில் உள்ள கப்பல் கொள்கலனில் உள்ள தொட்டிகளில் ‘ஜேட் பெர்ச்’ எனப்படும் ஒருவகை மீன்கள் உள்ளன. அவை 500 முதல் 600 கிராம் அளவுக்கு வளரும்போது சந்தையில் விற்கப்படுவதற்குத் தயாராகும்.
தெம்பனிஸ் ரவுண்ட் சந்தை, உணவு நிலைய வணிகர் சங்கமும் உள்ளூர் மீன் விற்பனையாளர்களும் சேர்ந்து அந்த மீன்களை விற்கும் முயற்சியில் ஈடுபடுவர். கிலோவுக்கு $38 வரை அந்த மீன் விலைபோகும்.
இந்தச் சமூகத் திட்டத்துக்காக மீன் விற்பனையாளர்களுக்கு அந்த மீன்கள் அடக்க விலையில் விற்கப்படும்.
பண்ணையின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, “கொள்கலன் மீன் பண்ணைத் திட்டத்துக்கு குடியிருப்பாளர்கள், வர்த்தகங்கள் உள்ளிட்ட தெம்பனிஸ் சமூகத்தினர் ஏற்கெனவே வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
“இந்தப் பண்ணைக்கு உதவ பொதுமக்களிடம் இருந்து எங்களுக்குப் பல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன,” என்று கூறினார்.
அவ்வளவாக பயன்படுத்தப்படாத இடங்களை அடையாளம் காண்பதன் மூலம் உள்ளூர் பண்ணைத் திட்டங்களுக்கு தெம்பனிஸ் ஆதரவளித்து வருவதாக திரு மசகோஸ் சொன்னார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் படுக்கையறையின் அளவுக்கு இருக்கும் கொள்கலன் மீன் பண்ணை, வழக்கமான பண்ணை முறையைவிட 25 விழுக்காடு கூடுதல் செயல்திறன் மிகுந்தது.
புது மீன் வளர்ப்புக்கு அப்பாற்பட்டு, வேலைவாய்ப்புகளையும் கல்வி நடவடிக்கைகளுக்கு இடவசதியையும் ஏற்படுத்தித் தருவது என சமூகத்துக்கு இதர அனுகூலங்களை இந்தக் கொள்கலன் பண்ணை வழங்கும்.