மீன் வலையில் சிக்கிய பச்சை நிற ஆமை மடிந்தது

மீன் வலையில் சிக்கிய பச்சை நிற ஆமை மடிந்தது

2 mins read
cd6e11f5-acbe-4464-ab30-6bb9fd5f60e7
மீன் வலையில் சிக்கிக்கொண்ட இரு ஆமைகளில் ஒன்று. - படம்: மரின் ஸ்டூவர்ட்ஸ்/ஃபேஸ்புக்
multi-img1 of 2
Google News Preferred Icon

லாஸரஸ் தீவுக்கு அருகே சனிக்கிழமை மாலை 5 மணியளவில் உல்லாசப் படகை இயக்கிய திரு நஸ்ரி, அங்கு 100 மீட்டர் நீளமுடைய மீன் வலையைக் கண்டறிந்தார்.

“அந்த வலையை அகற்றவேண்டும் என்பதை உணர்ந்தேன். இல்லாவிட்டால் என் படகோ வேறொரு படகோ வலையில் சிக்கிக்கொள்ள நேரிடும். மேலும், அப்பகுதியில் நீந்துவோருக்கு இது ஆபத்தானதாக அமையும். அங்கு வாழும் கடலுயிரினங்களுக்கும் காயம் ஏற்படக்கூடும்,” என்றார் அவர்.

ஆனால், அவர் வலையை இழுத்தபோது பச்சை நிற ஆமை அதில் சிக்கியிருந்தது.

ஈகள் பேக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகில் 24 பயணிகளுடன் திரு நஸ்ரி, 30, இருந்தார். ஞாயிற்றுக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அவர், அந்த ஆமை உயிரோடு இருந்தாலும் அது வலியில் அவதியுற்றதாகக் கூறினார்.

ஆமையை விடுவிக்க மீன் வலையைக் கத்தியால் அவர் வெட்டத் தொடங்கினார். வலையைத் தொடர்ந்து இழுத்தபோது அதில் மேலும் ஓர் ஆமை சிக்கியிருந்ததை திரு நஸ்ரி கண்டார்.

“மீன் வலையுடன் அப்பகுதியைவிட்டு உடனடியாகப் புறப்பட்டு ஒன் மரினா 15க்கு விரைந்தோம். ஏக்கர்ஸ் அமைப்பு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம்,” என்றார் அவர்.

உதவி வந்து சேர்வதற்குள் அந்த ஆமைகளில் ஒன்று இறந்துவிட்டது. ஆமையை உயிருடன் வைத்திருக்க தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை என்று திரு நஸ்ரி வருந்தினார்.

“மீன் வலையை அகற்றுவதற்கு எனக்கு ஒரு மணி நேரத்துக்குமேல் தேவைப்பட்டது,” என்றார் அவர்.

“நான் ஏழு ஆண்டுகளாக கடலில் பணியாற்றி வந்துள்ளேன். ஆனால், கடலுயிரினங்களுக்கு இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நிகழ்வதை நான் பார்த்தது இதுவே முதன்முறை,” என்றும் அவர் சொன்னார்.

இந்நிலையில், கனமழைக்கு மத்தியில் வலையை அகற்ற பாடுபட்ட ‘இன்ஃபினிட்டி செய்ல்ஸ்’ பணியாளர்களுக்கு ‘மரின் ஸ்டூவர்ட்ஸ்’ எனும் அமைப்பு சனிக்கிழமை இரவு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் நன்றி தெரிவித்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
உயிரியல்மீட்பு