அரசாங்கச் சேவைகள் குறித்த ஆய்வுகளை நிறைவுசெய்து பயனர்கள் ரொக்கம் பெற இணையத்தளம் ஒன்று வகைசெய்கிறது.
கணக்கு ஒன்றைத் தொடங்கிய பிறகு ஆய்வுகள், படிவங்களை நிரப்புதல் சம்பந்தப்பட்ட பல்வேறு பணிகளைப் பயனர்கள் செய்ய முடியும்.
பிள்ளை பெற்றுக்கொள்ளுதல், தொண்டூழியம் புரிதல், மனநலம் போன்ற பலதரப்பட்ட தலைப்புகளில் தற்போது ஆய்வுகள் இடம்பெறுகின்றன.
ஒவ்வோர் ஆய்வையும் முடித்ததற்கான வெகுமதி 10 முதல் 50 மெய்நிகர் காசு வரை இடைப்பட்டிருக்கும். அவற்றில் 1,000 காசுகளின் மதிப்பு $1க்குச் சமம்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (GovTech), கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் CrowdTaskSG இணையத்தளத்தில் பதிவுசெய்ய முடியும் என்றது. பயனர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் சிங்பாஸ் கணக்கு வைத்திருப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.
இந்த இணையத்தளத்தில் தற்போது 18,000க்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். குடிமக்களின் கருத்துகள், கண்ணோட்டங்கள், நிபுணத்துவம் ஆகியவற்றைப் பெற்று 70க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகள் பலனடையலாம் என்று அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுநாள் வரை CrowdTaskSG தளம் நிறைவேற்றப்பட்டுள்ள ஆய்வுகள் மூலம் சிங்கப்பூர் குடிமக்களிடம் இருந்து அரசாங்க அமைப்புகளுக்கு 20,000க்கும் அதிகமான கருத்துகள் கிடைத்துள்ளன.
“குடிமக்களின் கருத்துகளைக் கருத்தில்கொண்டு கொள்கைகளையும் நடைமுறைகளையும் வகுக்க அரசாங்க அமைப்புகளுக்கு இது உதவியாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“தாங்கள் அக்கறை கொள்ளும் அம்சங்களில் கண்ணோட்டங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்த குடிமக்களுக்கு தளம் அமைத்தும் தரப்படுகிறது,” என்று அப்பேச்சாளர் கூறினார்.
கருத்துகளைச் சேகரிப்பது தொடர்பில் அரசாங்க அமைப்புகளுடனும் குடிமக்களுடனும் சேர்ந்து செயல்பட புதிய, ஏற்புடைய வழிகளை தான் தொடர்ந்து ஆராயவிருப்பதாக அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு கூறியது.
பயனர்கள் go.gov.sg/ctsgfeedback எனும் இணையப்பக்கத்திற்குச் சென்று கருத்துகளை வழங்கலாம்.

