தேவையுடையோருக்கும் வசதி குறைந்தோருக்கும் இன, சமய பாகுபாடுகளின்றி சேவையாற்ற வேண்டும் என்றும் இதன் மூலம் பல்வேறு இனங்களுக்கும் சமயங்களுக்கும் மத்தியிலான பிணைப்பு வலுப்படும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
“பல்வேறு இனங்களுக்கும் சமயங்களுக்குமிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றை பற்றிய ஆழமான புரிந்துணர்வை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்றும் திரு தர்மன் தெரிவித்தார்.
“நமது நல்லிணக்கத்தை இன்னும் ஆழப்படுத்த வேண்டும் என்றும் அது நம் மீள்திறனை அதிகப்படுத்துவதோடு நம் அனைவரையும் வளப்படுத்தும்,” என்றும் அதிபர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் பல இன, பல சமய சமூகத்தின் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நடைமுறை வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திங்கட்கிழமை (நவம்பர் 20) நடைபெற்ற பல சமய தலைவர்கள் ஒன்றுகூடிய தீபாவளி தேநீர் விருந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு தர்மன் இவ்வாறு கூறினார்.
இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அனைத்து சமய மன்றத்துக்கு, இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இணைந்து $30,000 மதிப்புள்ள காசோலையை அதிபர் முன்னிலையில் வழங்கின.
பிஜிபி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘ஏகே தியேட்டர்’ குழுவின் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆகியவை நிறைந்த பாரம்பரிய நடனமும் ‘அனஸ்ஃபா’ குழுவின் நடனமும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
நிகழ்வின் மற்றோர் அங்கமாக, மூன்று இளையர்கள் வெவ்வேறு சமயங்களுக்குள் பொதுவாக இருக்கும் விழுமியங்களையும் சமயக் கருத்துகளையும் பற்றி எடுத்துரைத்த கலந்துரையாடல் அங்கமும் இடம்பெற்றது.
இத்துடன் ‘சன்பீம் பிளேஸ்’ குழந்தைகள் நலக்காப்பகத்தின் குழந்தைகள் வண்ணக் காகிதத்தால் ஆன விளக்கு உருவம் கொண்ட கலைப்பொருளை அதிபர் தர்மனுக்கு வழங்கினர்.
“சிங்கப்பூரில் பல சமயங்களுள் இருக்கும் புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் பலப்படுத்தும் வண்ணம் பல சமயத் தலைவர்கள் ஒன்றுகூடும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம் ,” என்று கூறினார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன்.
“சமயத் தலைவர்களின் ஒற்றுமையே மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தலைவர்களுக்குள் இருக்கும் புரிதல் எதிர்பாரா பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணவும் உதவியாக இருக்கும் ,” என்று கூறினார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி த. ராஜசேகர்.
“பல சமயங்களுக்கு பொதுவான இந்தத் தீபாவளிப் பண்டிகை அனைவருக்குள்ளும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஒரு கொண்டாட்ட நிகழ்வு. அனைத்து சமயத் தலைவர்களும் ஒன்றுகூடி அதனைக் கொண்டாடுவது நம் ஒற்றுமையை வலிமையடையச் செய்யும்,” என்று கூறினார் இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் க. செங்குட்டுவன்.