தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்குப் பயணிகள் வருகை தொடர்ந்து 3வது மாதமாகச் சரிவு

2 mins read
2c7c63fb-7ace-44ca-a7ef-eccae53d10d0
இதுவரை சிங்கப்பூருக்கு இவ்வாண்டு 11.3 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை தந்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருகைதந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அக்டோபரில் மூன்றாவது மாதமாகச் சரிந்தது.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் வெளியிட்ட மிக அண்மைய தரவுகளின்படி சிங்கப்பூருக்கு 1,125,948 சுற்றுப்பயணிகள் வருகை தந்திருந்தனர்.

இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாதம் பதிவான 1,130,757 வருகையாளர்களைக் காட்டிலும் சற்றுக் குறைவு. இருப்பினும், கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வருகை தந்த 816,833 வருகையாளர்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அக்டோபரில் பதிவான எண்ணிக்கை 37.8% அதிகம்.

தொடர்ந்து சிங்கப்பூருக்கு இந்தோனீசியாவிலிருந்து வருகைதந்த பயணிகளே ஆக அதிகம். இதன்படி, அக்டோபரில் 180,881 பேர் வந்திருந்தனர். முந்திய மாதத்தில் 175,601 சுற்றுப்பயணிகள் இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்திருந்தனர்.

அடுத்த நிலையில் ஆக அதிகமான சுற்றுப்பயணிகள் சீனாவிலிருந்து வந்திருந்தனர். அக்டோபரில் 122,764 பேர் இந்நாட்டிலிருந்து வருகை அளித்திருந்தனர். இருப்பினும், செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 135,677ஆக இருந்தது.

அதையடுத்து இந்தியாவிலிருந்து ஆக அதிகமானோர் சிங்கப்பூருக்கு வருகை தந்தனர். அக்டோபர் மாதத்தில் 94,332 பேர் சிங்கப்பூர் வந்திருந்தனர். செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து வந்தவர் எண்ணிக்கை 81,014ஆக இருந்தது.

ஆக அதிகமான சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்திருந்த பட்டியலில் நான்காவது இடத்தில் மலேசியா இடம்பெற்றுள்ளது. செப்டம்பரில் பதிவான 89,384 வருகையாளர் எண்ணிக்கை அக்டோபரில் சற்று சரிந்து 88,641ஆகப் பதிவானது.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் இவ்வாண்டு முழுமைக்கும் 12 முதல் 14 மில்லியன் வருகையாளர்களை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இதுவரை 11.3 மில்லியன் பயணிகளை வரவேற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்