சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா 2023: பெரியாரும் அறிவியலும் என்ற தலைப்பில் நவம்பர் 5ஆம் தேதி மாலை உமறுப்புலவர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
பெரியாரின் பொன்மொழியுடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நெறியாளர் செல்வி யாழினி கமலக்கண்ணன். மன்றத்தின் செயலாளர் திருமதி இரா. தமிழ்ச்செல்வி, சிங்கையின் வெண்பா சிற்பி வி. இக்குவனம், பெரியாரைப் பாராட்டி எழுதிய வாழ்த்தைக் கூறி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் நூற்றாண்டில் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் “நம் தேசத் தந்தை லீ குவான் இயூ” என்ற தலைப்பில் பாலர்பள்ளி இரண்டாம் நிலை மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதில் முதல் பரிசு பெற்ற மாணவி பாலாஜி பிரனிஷ்கா (வயது 6) தனது மழலைக் குரலில் திரு லீ குவான் இயூயைப் பற்றி பேசி அனைவரையும் வியக்க வைத்தார்.
மன்றத்தின் தலைவர் திரு க.பூபாலன் தமது தலைமையுரையில், தந்தை பெரியார் இரு முறை சிங்கப்பூர் வந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். ‘பெரியார் பணி 2015’ மலருக்கு சிங்கையின் முன்னாள் அதிபர் மறைந்த திரு. எஸ்.ஆர்.நாதன் எழுதியிருந்த வாழ்த்து செய்தியைப் பற்றியும், மூத்த எழுத்தாளர் மறைந்த திரு. ஏ.பி.ராமன் பெரியாரையும் நம் தேசத் தந்தை திரு லீ குவான் இயூவை பற்றியும் எழுதிய கட்டுரையை பற்றியும் நினைவுகூர்ந்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டேரல் டேவிட் பேசும்போது, “சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினர், வெவ்வேறு சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களாக இருப்பினும் இந்தியர்கள் என்பதில் ஒன்றுபட்டுள்ளோம். பெரியார், சிங்கப்பூர் மற்றும் மலாயாவிலுள்ள தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு நிறைய அறிவுரைகளை கூறியுள்ளார். அவரது பேச்சுகளை எனது தாத்தாவும் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று கூறினார்.
மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டிகள் 2023ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கோப்பை, பரிசுத்தொகை ஆகியவற்றை திரு டேரல் டேவிட் வழங்கினார்.
சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றிய தமிழ் சான்றோர்களைப் பாராட்டும் வகையில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் 2009ஆம் ஆண்டு முதல் பெரியார் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இவ்வாண்டு கல்வியாளரும் மூத்த எழுத்தாளருமான திரு.பொன் சுந்தரராசுவுக்கு பெரியார் விருதை திரு டேரல் டேவிட் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்தியாவின் நிலவு மனிதர் விண்வெளி விஞ்ஞானி முனைவர் மயில்சாமி அண்ணாதுரை “பெரியாரும் அறிவியலும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பழைமையைத்தாண்டி புதுமையை நோக்கி செல்ல வேண்டும். அதுதான் மனிதனுக்கான வளர்ச்சி என்ற பெரியாரின் கருத்தைச் சொல்லி தொடங்கினார். பெரியார் சொன்ன இதுபோன்ற சில பொன்மொழிகளை மயில்சாமி அண்ணாதுரை அவரது பார்வையில், அவை அவரது வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் எப்படி தன்னை தொடர்ந்து வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படத் தூண்டின என்பதை கூறி ஒளிப்படவில்லைகளைக் காட்டி பேசினார்.
அவரின் உரை முடிந்தபிறகு அரங்கத்தில் இருந்தவர்கள் எழுந்து நின்று தங்களின் உணர்வை கைதட்டலின் வழியாக காட்டினார்கள்.