தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்கால இணையத் தாக்குதலைத் தடுக்க பொதுச் சுகாதாரப் பராமரிப்பு மருத்துவமனைகள் தன்னை மேம்படுத்திக்கொள்ளும்

2 mins read
a4cb5245-3659-4997-8bd9-3513d6220f0d
பொதுச் சுகாதாரப் பராமரிப்பு மருத்துவமனைகள். - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படங்கள்

பொது மருத்துவமனைகளிலும் பலதுறை மருந்தகங்களிலும் அண்மையில் நிகழ்ந்த இணைய தாக்குதலுக்குப் பிறகு, தேசிய சுகாதாரப் பராமரிப்பு அமைப்பின் தகவல் தொழில்நுட்ப வழங்குநரான ‘சினாப்க்ஸ்’, எதிர்காலத்தில் நிகழக்கூடிய இணைய தாக்குதலைத் தடுக்கும் வகையில் தற்காப்பு வழிமுறைகளை மேம்படுத்தவிருப்பதாக திங்கட்கிழமை (நவம்பர் 20) தெரிவித்தது.

தனது தகவல்தொழில்நுட்ப வடிவமைப்பு முறையை மேலும் பன்மடங்கு பலப்படுத்த ஆவன செய்யவிருப்பதாகவும் அதன் மூலம் எதிர்காலத்தில் நிகழக்கூடிய புதிய வகை இணையத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் சினாப்க்ஸ் கூறியது.

பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களின் இணையச் சேவைகளில் நவம்பர் 1ஆம் தேதி நிகழ்ந்த இணைய தாக்குதலால் ஏழு மணிநேர தடை ஏற்பட்டது என்று அந்த அமைப்பு சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து நடத்திய புலனாய்வுக்குப் பிறகு தெரிவித்தது.

இணையச் சேவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வகையான இணைய தாக்குதலில், இணைய தாக்குதல்காரர்கள் ஒரு குறிப்பிட்ட இணையச் சேவைக்குத் தொடர்ந்து இணைய கோரிக்கைகளை அனுப்புவார்கள். அதனால், இயல்பாக அந்த சேவைக்குக் கோரிக்கை அனுப்ப முயலும் இணையவாசிகள் அவ்வாறு செய்ய முடியாமல் தவிப்பார்கள்.

“மேம்பட்ட கண்காணித்தல், மிரட்டல்களை அடையாளம் காணுதல், தகுந்த தற்காப்பு வழிமுறைகள் ஆகியவற்றை கொண்ட ஒருங்கிணைப்பை உள்ளடக்கிய செயல்முறைகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்,” என்று சினாப்க்ஸ் விவரித்தது.

இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடிய இணைய தாக்குதலை எதிர்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்தும். மேலும், அது பொதுச் சுகாதாரப் பராமரிப்பு முறையின் நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்க உதவும் என்றும் அந்த அமைப்பு கூறியது.

நவம்பர் 1ஆம் தேதி காலை 9.20 மணி முதல் மாலை 4.30 மணி வரை, பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், மனநலக் கழகம் முதலிய பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களின் இணையச் சேவைகளில் முழுமையான தடை ஏற்பட்டது.

அதனால், பொதுமக்களால் அவற்றின் இணையத் தளங்கள், மின்னஞ்சல்கள், ஊழியர்களுக்கான இணைய உற்பத்தித்திறன் கருவிகள் ஆகியவற்றை அடைய முடியவில்லை.

சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை போன்றவை பாதிக்கப்பட்ட அமைப்புகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்