துப்புரவு ஊழியருக்குப் போதைப் பொருள் கடத்தலை அறிமுகப்படுத்திய மேலதிகாரிக்கு சிறை, பிரம்படி

3 mins read
629cb4b4-75fe-4f8e-8eaf-c4b08e47678d
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

ஹார்ட்பீட்@பிடோக் சமூக நிலையத்தில் வேலை செய்த துப்புரவுப் பணியாளர், தனது மேலதிகாரியிடமிருந்து போதைப் பொருள் கடத்தும் வாய்ப்பு பற்றி தெரிந்துகொண்டார்.

பின்னர் அவர்கள் இருவரும் போதைப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு அவற்றை துப்புரவாளர்களின் அறையில் மறைத்து வைத்தனர்.

அவ்விருவரிடம் போதைப் பொருளைக் கொடுக்க வேண்டிய ஆடவர் ஒருவரை மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் (சிஎன்பி) கைது செய்தவுடன், அவ்விரு ஆடவர்களின் குற்றச் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அந்தப் போதைப் பொருளுக்குப் பதிலாக போலியான போதைப் பொருளைப் பிடிபட்ட ஆடவரிடம் கொடுத்து அவற்றை துப்புரவாளரிடமும் அவரது மேலதிகாரியிடமும் கொடுத்துவர சொல்லி அனுப்பினர்.

ஆடவரிடமிருந்து போதைப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள வந்தபோது, துப்புரவாளரான 25 வயது தேவேந்திரன் சண்முகம் என்ற மலேசியர் கைது செய்யப்பட்டு, அவருக்கு நவம்பர் 20ஆம் தேதி 10 ஆண்டு சிறையும் 10 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது. அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

ஒரு துப்புரவு நிறுவனத்தில் வேலை செய்யும்போது தேவேந்திரனும், 29 வயது மலேசியரான தீபன்ராஜ் அன்பழகனும் அறிமுகமாயினர். பின்னர் 2021 ஆகஸ்ட்டில் ஹார்ட்பீட்@பிடோக் சமூக நிலையத்தில் தீபன்ராஜின் கீழ் வேலை செய்ய தேவேந்திரன் மாற்றலாகி சென்றபோது, அவர்கள் இருவரும் நெருக்கமாயினர்.

‘போஸ்’ என்று அழைக்கப்படும் அடையாளம் தெரியாத நபரிடம் தீபன்ராஜ் கடன் வாங்கியிருந்தார். அவரின் கடனை அடைக்க, அவருக்காக போதைப் பொருள் கடத்த தீபன்ராஜ் ஒப்புக்கொண்டார். இதுபற்றி அறிந்த தேவேந்திரன், தான் முன்பு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்ததால், அந்தப் போதைப் பொருளைப் பணத்துக்காக விநியோகம் செய்ய சம்மதித்தார்.

அந்த வகையில் தேவேந்திரன், டையமோஃபின், மெத், கஞ்சா, போதைக் கலவை போன்ற பொதைப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு அவற்றை 16 முறை 2022 ஜனவரி முதல் மே வரை விநியோகம் செய்துள்ளார். ஒவ்வொரு விநியோகப் பணிக்கும் தேவேந்திரனுக்கு $500 முதல் $2,000 வரை கிடைக்கும்.

2022, மே 18ஆம் தேதி இரவில் சிஎன்பி அதிகாரிகள் முகம்மது அம்சியார் சோலிஹின் அட்னான் எனும் 29 வயது மலேசிய ஆடவரை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்தனர்.

அவரிடம் சிக்கிய பொதைப் பொருள், தீபன்ராஜின் ‘போஸ்’ முதலாளிக்கு செல்ல வேண்டியிருந்தது. அதில் உள்ளவர்களை பிடிக்கும் முயற்சியாக சிஎன்பி அதிகாரிகள் உண்மையான போதைப் பொருளுக்குப் பதிலாக போலியானதை வைத்து அம்சியாரை விநியோகிக்கச் சொன்னார்கள்.

போதைப் பொருள் வரும் செய்தி கிடைத்தவுடன் போஸ் அதுபற்றி தீபன்ராஜிடம் தெரிவிக்க, அவர் தேவேந்திரனை அதைப் பெற்றுவரச் சொன்னார்.

2022, மே 19ஆம் தேதி பின்னிரவு 1.30 மணிக்கு, தேவேந்திரன் போலியான போதைப் பொருளை அம்சியாரிடமிருந்து பெற்றுக்கொண்டு, புளோக்குக்கு அருகே தீபன்ராஜைச் சந்திக்க சென்றபோது சிஎன்பி அதிகாரிகள் தேவேந்திரனைக் கைது செய்தனர். மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்ற தீபன்ராஜ் பின்னர் கைது செய்யப்பட்டார்.

அம்சியார், தீபன்ராஜ் இருவர் மீதான போதைப் பொருள் குற்றச்சாட்டுகளும் வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்