தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாறிவரும் சூழலுக்கு முழுமைத் தற்காப்பு இன்றியமையாதது: தற்காப்பு அமைச்சர்

2 mins read
7145f492-0103-470a-8fcb-476a5abc4804
நிகழ்வில் கலந்துகொண்ட தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, திரு வருண் ராம்தாஸுக்கு விருதை வழங்கினார். - படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூரின் முழுமைத் தற்காப்புக்கும் தேசிய சேவைக்கும் பங்களித்த தொழில்கள், நிறுவனங்கள், தனிநபர்களை அங்கீகரிக்கும் நோக்கில் இவ்வாண்டு மொத்தம் 218 தேசிய சேவை ஆதரவாளர் விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் 113 விருதுகள் சிறிய, நடுத்தர தொழில்களுக்குக் கிடைத்தன.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் முழுமைத் தற்காப்பு விருது விழா நிகழ்ச்சியில் அந்த விருதுகள் வழங்கப்பட்டன. சிறிய, நடுத்தர தொழில்கள் பிரிவில் விருது பெற்றவர்களில் ஒருவரான திரு வருண் ராம்தாஸ், 41, ‘ஃபிஸ்க் டெக்’ என்னும் தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.

வர்த்தக முக்குளித்தல் சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘ஃபிஸ்க் டெக்’ ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

திரு வருண், 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். சிங்கப்பூரை தனது இருப்பிடமாக அமைத்துக்கொண்ட அவர், சிங்கப்பூர் ஆயுதப் படையின் தொண்டூழியர் அணியில் கடந்த ஐந்தாண்டுகளாக உள்ளார்.

இதன் மூலம் சிங்கப்பூரின் தற்காப்புக்கு தன்னால் இயன்றதைப் பங்களிப்பதாகக் கூறிய அவர், தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 25 விழுக்காட்டினர் போர்க்காலப் படைவீரர்கள் என்றார்.

அவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேண ஊக்குவிக்கும் திரு வருண், போர்க்காலப் படைவீரர்கள் தனிநபர் உடலுறுதிச் சோதனையில் எப்போதும் தங்கத் தரநிலையைத் தக்கவைத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்துகிறார்.

மேலும், இவரது நிறுவனம் சிங்கப்பூர் ஆயுதப் படையின் மூலாதார கூறுகளான பாதுகாப்பு, போர்வீர மனப்பான்மை, படைவீரர்களைக் கவனித்துக்கொள்வது போன்ற நற்பண்புகளை விதைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

ஊழியர்கள் பெரும்பாலும் தளபத்திய பதவிகளிலிருந்து வருவதாகக் கூறிய திரு வருண், பணியிடத்தில் அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள தக்க ஏற்பாடுகளையும் நிறுவனம் செய்துள்ளதாக சொன்னார்.

ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசும் பழக்கத்தைத் தனது நிறுவனத்தில் கடைப்பிடிக்கும் திரு வருண், போர்க்காலப் படைவீரர்கள் தங்களின் இலக்குகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதையும் தேசிய சேவையில் தொழில் மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு முக்கிய நியமனங்களை அடைவதையும் ஊக்குவிக்கிறார்.

திங்கட்கிழமை மாலை ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு நிலையத்தில் இடம்பெற்ற விருது விழாவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

சிறப்புரையாற்றிய அவர், “முழுமைத் தற்காப்பு நம் நாட்டுக்கு மிக முக்கியமான ஒன்று. கொவிட்-19 பெருந்தொற்றைக் கடந்த பிறகு வருங்கால இளம் தலைமுறையினர் நாட்டுக்குத் தேவையான முழுமைத் தற்காப்பை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றனர்.

“பத்தில் ஒன்பது இளையர்கள் முழுமைத் தற்காப்புக்குப் பங்களிக்க ஆவலுடன் உள்ளனர். நாம் வாழும் நாட்டின் தற்காப்புக்கு நாம்தான் ஆதரவளிக்க வேண்டும்.

“ரஷ்யா-உக்ரேன் போர், ஹமாஸ்-இஸ்ரேல் போர் போன்றவற்றால் நம் நாடு பாதிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் நிலையற்றத்தன்மை அதிகரித்து பணவீக்கமும் அதிகரிக்கும்,” என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்