அதிபர் தர்மன் சண்முகரத்னம் இஸ்தானாவில் நவம்பர் 21ஆம் தேதி இந்தோனீசிய தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியான்தோவுக்கு ஆக உயரிய ராணுவ விருது வழங்கி கெளரவித்தார்.
அவருக்கு சிங்கப்பூர்-இந்தோனீசிய இருதரப்பு ராணுவ உறவை மேம்படுத்த குறிப்பிடத்தக்க பங்களித்ததற்காக ‘தார்ஜா உத்தமா பக்தி செமர்லாங்’ எனப்படும் தனித்துவமிக்க சேவை (ராணுவ) விருது வழங்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது, ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஏரோன் பெங் ஆகியவர்களுடன் சிங்கப்பூர், இந்தோனீசியாவைச் சேர்ந்த மூத்த அரசு, தற்காப்பு அமைச்சு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர், இந்தோனீசியாவுக்கு இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு திரு பிரபோவோவின் தலைமையில் மறுஉறுதி செய்யப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. அது இரு நாட்டு தற்காப்பு உறவில் ஒரு மைல்கல் என்றும் அமைச்சு விளக்கியது.

