சிங்கப்பூரை ஆட்சி செய்யும் மக்கள் செயல் கட்சி, நாட்டின் வளர்ச்சிக்கும் ஊழியர்களின் கொள்கைகளுக்கும் ஆதரவாக இருந்து வருகிறது. அதனால்தான் முத்தரப்பு பங்காளித்துவம் என்பது சிங்கப்பூரில் ஆற்றலுடன் செயல்பட முடிகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
“இத்தகைய கொள்கைகள் நல்ல பல வேலைகளை உருவாக்க உதவுகின்றன. அவ்வேலைகளைச் செய்வதற்கான ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றன. மேலும் ஒவ்வொரு சிங்கப்பூரர்களுக்கும் வீடு, சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் அரசாங்கத்தின் அதிக மானியத்துடன் உறுதி செய்யப்படுகிறது,” என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.
பொருளியல் வளர்ச்சியின் முழுப் பலனையும் அடையச் செய்வதற்கான ‘சிங்கப்பூர் பிரீமியம்’ என்பது குடியரசில் உருவாகியிருப்பதாகக் கூறினார்.
இது, சிங்கப்பூரில் ஒரே வேலையில் நீடிக்கும் ஊழியர்கள், இவ்வட்டாரத்தில் இதே போன்ற வேலைகளில் இருப்பவர்களைவிட கணிசமாக சம்பாதிக்க வழியமைத்துள்ளது என்று என்டியுசி தேசிய பேராளர்கள் மாநாட்டில் பிரதமர் லீ சொன்னார்.
ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் புதன்கிழமை அன்று இந்த மாநாடு நடைபெற்றது.
சிங்கப்பூரில் நிலவும் இணக்கமான தொழில்துறை உறவு, நட்பார்ந்த வர்த்தகச் சூழல் போன்றவற்றால் நிறுவனங்கள் அதிக ஊதியம் அளிக்க தயாராக இருக்கின்றன. இத்தகைய போக்கு எத்திசையை நோக்கிச் செல்கிறது என்பதை அறிந்த நிறுவனங்கள் அதனை மதிக்கின்றன. பொது நலனுக்காகவும் எல்லாம் செயல்படவும், அனைவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கவும் அனைவரும் ஒன்றிணைகின்றனர்.
அரசாங்கம், நாட்டை சரியான திசையில் வழிநடத்துவதால் முத்தரப்பு பங்காளிகள் ஒன்றுசேர்ந்து நாட்டை செழிப்படையச் செய்யவதும் அதன் வளர்ச்சியை பகிர்ந்துகொள்வதும் எளிதாகிறது என்று பிரதமர் கூறினார்.
தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்பு பங்காளித்துவம் ஒன்றுபட்ட சக்தியாக விளங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
நல்ல ஆட்சிக்கு அப்பாலும் வாழ்க்கைத் தரம், விருப்பங்கள் அதிகரித்தாலும் சிங்கப்பூரர்கள் செலுத்தும் வரிக்கு மதிப்பானவற்றை வழங்க, மக்கள் செயல் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. பொது அமைப்புகளை வலுவாக வைத்திருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது. அரசாங்கம் செலவுகளையும் வரியையும் குறைவாக வைத்திருப்பதால் ஊழியர்கள் தங்களுடைய சொந்த உழைப்பின் பலனை நேரடியாக அனுபவிக்க முடிகிறது.
“இது, உங்களுடைய சொந்த ஊதியத்தின் பெரும்பங்கை வரிக்குச் செலுத்தி இலவசங்கள், இலவச சேவைகள் வழங்குவதைவிட மேலானது,” என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.
பொதுப் போக்குவரத்து மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை வலுவான நிலையிலும் கட்டுபடியாகக் கூடிய விலையிலும் வைத்திருக்க முடிகிறது. வரி செலுத்துவோர் மீது முழுச் சுமையையும் சுமத்தாமல் அவர்கள் பயன்படுத்தும் அளவுக்கு மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இத்தகைய அணுகுமுறையால் சேவைகளை வழங்குவதற்கான செலவு அதிகரிக்கும் போது கட்டணங்களும் அவ்வப்போது கூடுகின்றன. ஆனால் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு அரசாங்கம் கூடுதல் உதவிகளை வழங்கும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
நான்கு நாள் நிகழ்ச்சியில் தொடக்க நாளான புதன்கிழமை அன்று பிரதமர் லீ உரையாற்றினார்.
இதில் ஏறக்குறைய 1,500 தொழிற்சங்கத் தலைவர்கள், முத்தரப்பு பங்காளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரை நிர்மாணித்தவரும் முதல் பிரதமருமான லீ குவான் இயூ, 1969ஆம் ஆண்டின் நவீனமயமாக்கும் கருத்தரங்கில் பேசியபோது சிங்கப்பூரின் எதிர்காலம் வலுவான தொழிற்சங்கங்களின் கையில் இருக்கிறது என்று கூறியிருந்ததை பிரதமர் லீ தனது உரையின் முடிவில் நினைவுகூர்ந்தார்.

