சூதாட்டக்கூட மோசடி: மலேசியருக்குச் சிறை

சூதாட்டக்கூட மோசடி: மலேசியருக்குச் சிறை

2 mins read
91a8e37b-6d3d-4869-90f5-a114679088fd
மோசடிக் கும்பல் சென்ற ஆண்டு டிசம்பர் 16 முதல் டிசம்பர் 23 வரை சிங்கப்பூரில் செயல்பட்டது. - படம்: சாவ்பாவ்

மரினா பே சாண்ட்ஸ் சூதாட்டக் கூடத்தில் சட்டவிரோதமாகக் கருவிகளைப் பயன்படுத்தி சீட்டு அட்டைகளைப் பதிவுசெய்த வெளிநாட்டுக் கும்பலுடன் தொடர்புடைய மலேசிய ஆடவர் ஒருவருக்கு மூவாண்டுகளும் நான்கு மாதங்களும் சிறைத் தண்டனையாக விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு டிசம்பர் 16 முதல் டிசம்பர் 23 வரை சிங்கப்பூரில் செயல்பட்ட அந்தக் கும்பல் மொத்தம் $433,730 வென்றது.

முதன்முறையாக இத்தகைய வழக்கு இங்கு நடந்துள்ளதாக நம்பப்படுகிறது.

டான் கியென் யி, 35, என்ற அந்த மலேசியர், கடந்த அக்டோபர் மாதம் சூதாட்டக்கூட கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

டானுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படும் தைவானியர் ஹுங் ஜுங் ஹாவ், 27, மலேசியர் சாய் ஹீ கியோங், 46, ஆகிய இருவரும் இவ்வாண்டு முன்னதாக சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள்மீதான வழக்கு தொடர்கிறது.

கும்பலில் எஞ்சிய மூவரும் தைவானியர்கள் என்று கூறப்பட்டது. இருப்பினும், அவர்கள் கைதுசெய்யப்பட்டார்களா என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.

கும்பலின் உத்தி குறித்து நீதிமன்றத்தில் விளக்கப்பட்டது. கும்பலில் உள்ள பெண் உறுப்பினர் ஒருவர், சூதாட்டக்கூட விளையாட்டு மேசையில் இருக்கும்போது தனது கைப்பேசியுடன் இணைக்கப்பட்ட ஒலிவாங்கி ஒன்றை மறைக்கப்பட்ட விதத்தில் அணிந்திருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் வேறு இடத்தில் இருக்கும் ஒரு கும்பல்காரரிடம் அவர் மேசையில் நடப்பவற்றைப் பற்றி தகவல்கள் தெரிவிப்பார். அந்தக் கும்பல்காரர் கிடைத்த தகவல்களை ‘எக்ஸெல்’ அட்டவணைச் செயலியில் கணக்கிட்டு, அந்தப் பெண்ணிடம் எவ்வாறு பந்தயம் கட்டுவது என்பதைக் கூறுவார்.

இந்நிலையில், டான் இவ்வாண்டு பிப்ரவரியில் கோலாலம்பூரில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்