தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யுனிக்லோ கடையில் திருட்டு; இந்தியாவைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்குச் சிறைத் தண்டனை

3 mins read
554b9ce6-6b57-4bd8-afd0-cef08abee669
ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் உள்ள யுனிக்லோ கடையில் அக்டோபர் 12ஆம் தேதி திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. - கோப்புப் படம்: லியான்ஹ சாவ்பாவ்

யுனிக்லோ கடையில் $1,700 மதிப்புள்ள உடைகளைத் திருடியதற்காக இந்தியாவைச் சேர்ந்த நான்கு இந்திய மாணவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆடைகளில் உள்ள விலைப் பட்டியலில் அடையாள வில்லைகள் ஒட்டப்பட்டிருக்கும். அவற்றை அகற்றினால் எச்சரிக்கை ஒலி எழுப்பாது என்று நம்பி ஒரு பை நிறைய ஆடைகளை எடுத்துச் செல்ல முயற்சி செய்து அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

ஷிஹோரா ரிதாம் முகேஷோபாய், 20, ஹன் ஸ்மிட் அஷோகபாய், 21, குவாடியா மிலன் ஞானசியாம்பாய், 26, சவ்ஹான் ருச்சி சஞ்சய்குமார், 25, ஆகிய நால்வருக்கும் நவம்பர் 22ஆம் தேதி நாற்பது முதல் 65 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நால்வரும் சிங்கப்பூரில் படிக்க மாணவர் பாஸ் வைத்துள்ளனர்.

ஒரே வீட்டில் தங்கியுள்ள அவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கின்றனர்.

ஆக இளையரான ரிதாம், ஒரு திருட்டுக் குற்றத்தையும் திருட முயற்சி செய்த குற்றத்தையும் ஒப்புக் கொண்டார். அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற மூவரும் ஒரு திருட்டுக் குற்றத்தையும் அல்லது திருட முயற்சி செய்த குற்றத்தையும் ஒப்புக் கொண்டனர்.

அக்டோபர் 2ஆம் தேதி ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் உள்ள யுனிக்லோ கடையில் நால்வரும் சதித் திட்டம் தீட்டி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் மேக்ஸிமிலியான் சிவ் தெரிவித்தார்.

நீதிமன்ற ஆவணங்களில் பாவிக், 24, விஷால், 23 மற்றும் தர்ஷன், 22 என அடையாளம் காணப்பட்ட மேலும் மூன்று இந்திய நாட்டு மாணவர்களும் இந்தச் சதியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பாவிக்கும் விஷாலும் கடையில் திருட திட்டமிட்டதாகவும் மற்றவர்களையும் இதில் சேர்த்துக் கொண்டதாகவும் ஆவணம் தெரிவித்தது.

சம்பவத்தன்று அனைவரும் குழுவாக கடைக்குச் சென்றனர். அங்கு ஆடைகளை எடுத்துக் கொண்டு அதிலிருந்த விலைப் பட்டியலை அவர்கள் அகற்றினர். சுயமாக பணம் செலுத்தும் முகப்புக்குச் சென்று $3.90 விலை கொண்ட மூன்று கைப்பைகளை வாங்கி அதில் ஆடைகளை அவர்கள் போட்டுக் கொண்டு மாலை 7.30 மணியளவில் கடையைவிட்டுச் சென்றனர்.

ஏறக்குறைய 67 ஆடைகளை அவர்கள் திருடினர். அதன் மொத்த மதிப்பு $1,700.

நான்கு நாட்களுக்குப் பிறகு ருச்சியும் ரிதாமும் பாவிக் மற்றும் இதர மூன்று இந்திய நாட்டவர்களான ஷிவம், 27, ஜே, 26, மில்லி, 27 ஆகியோருடன் அதே யுனிக்லோ கடைக்குச் சென்றனர்.

அதே போன்று பொருள்களை அவர்கள் திருடினர். ஆனால் அவர்கள் அவசரமாக கைப்பையில் ஆடைகளைப் போடுவதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் ரசீது கேட்டபோது மழுப்பலான பதில் கிடைத்தது.

தனது நண்பரிடம் ரசீது இருப்பதாகவும் அவர் ஏற்கெனவே கடையைவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறிய ரிதாம் நழுவி வெளியே சென்றுவிட்டார். அவருடன் இருந்த ஷிவமும் ஆடைகள் இருந்த கைப்பையை போட்டுவிட்டு வெளியேறிவிட்டார்.

அவர்கள் 72 ஆடைகளை திருடியிருந்தனர். அவற்றின் மதிப்பு 2,271 வெள்ளி.

யுனிக்லோ கடையின் விற்பனை அதிகாரி காவல்துறையில் புகாரளிக்க கண்காணிப்புக் கேமராவில் அவர்களது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்குள் பாவிக், விஷால், தர்ஷன், மிலி ஆகியோர் சிங்கப்பூரிலிருந்து சென்றுவிட்டனர்.

எஞ்சிய நால்வருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதே குழுவில் இருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த பிரஹம்பாட் கோமல் சேத்தன்குமார், 27, கிறிஸ்டியன் அர்பிடா அர்வின்பாய், 27, ஆகிய இரண்டு பெண்களும் பின்னேரத்தில் திருட்டுக் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக இருந்தது. ஆனால் கடையில் திருடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மாவட்ட நீதிபதி டியோ அய் லின், நவம்பர் 30ஆம் தேதி வழக்குக்கு முந்திய கலந்துரையாடலை நடத்த உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்