பீஷானில் நவம்பர் 22ஆம் தேதியன்று எஸ்பிஎஸ் ஈரடுக்குப் பேருந்து ஒன்று மரக்கிளையில் மோதியதால் அதன் மேற்கூரை பலத்த சேதமடைந்து, கிட்டத்தட்ட பேருந்திலிருந்து பிய்ந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் 54 வயது முதியவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஷான் ஸ்திரீட் 22ல் பீஷான் ஸ்திரீட் 24ஐ நோக்கிச் செல்லும் வழியில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தங்களுக்கு அன்று இரவு 10.32 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் விளக்கினர்.
எஸ்பிஎஸ் சேவை எண் 88 வழித்தடத்தில் செல்லும் அந்தப் பேருந்து மரக்கிளை ஒன்றில் மோதியதால் அந்த ஈரடுக்குப் பேருந்தின் மேற்கூரை சேதமுற்றது.
இந்த விபத்து தொடர்பில் சீன நாளிதழான லியன்ஹ சாவ்பாவ் வாசகர் ஒருவர் அனுப்பிய புகைப்படத்தில் பேருந்தின் மேல் அடுக்கின் முன்பகுதியில் பூச்சி வலைபோல் விரிசல்கள் தெரிந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு புகைப்படத்தில், பேருந்தின் இடப்பகுதியின் மேற்கூரையின் ஒரு பகுதி பிய்ந்து தொங்கியது தெரிகிறது.

