தேசிய சேவை மீதான சிங்கப்பூரின் கடப்பாடு தொடர வேண்டும்: துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

தேசிய சேவை மீதான சிங்கப்பூரின் கடப்பாடு தொடர வேண்டும்: துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

2 mins read
d72d890b-d12c-4ace-bdb2-3de52ce4aa38
சூவா சூ காங்கில் வியாழக்கிழமை அன்று சாஃப்ராவின் புதிய பொழுதுபோக்கு மன்றத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் பங்கேற்ற துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் உடலுறுதிக் கூடத்தைப் பார்வையிட்டார். வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் ஆகியோரும் உடன் உள்ளனர். - படம்: ஷின் மின்

சிங்கப்பூர், வலுவான ஆயுதப் படையைத் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும். தேசிய சேவைக்கான கடப்பாடு தொடர வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.

சூவா சூ காங்கில் வியாழக்கிழமை அன்று சாஃப்ராவின் ஏழாவது பொழுதுபோக்கு மன்றத்தை திறந்துவைத்து அவர் பேசினார்.

உலகம் முன்பைவிட தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது என்று குறிப்பிட்ட திரு வோங், இஸ்ரேல்-ஹமாஸ் சச்சரவு, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் ஆகியவற்றை சுட்டிக் காட்டினார்.

சிங்கப்பூருக்கு அருகே ஆசியாவில் பெரும்பாலும் அமைதி நிலவினாலும் அமெரிக்கா, சீனாவுக்கு இடையிலான போட்டி, தைவான் நீரிணை, தென் சீனக் கடல் விவகாரம் ஆகியவை தவறாகப் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.

தேசிய சேவையின் கடமையை பல தலைமுறையினர் தீவிரமாக எடுத்துக் கொண்டதால் சிங்கப்பூரைப் பாதுகாக்கும் நம்பிக்கைக்கு உரிய தடுப்பு அரணாக சிங்கப்பூர் ஆயுதப் படை விளங்குவதாகவும் சிங்கப்பூர் அமைதியையும் பாதுகாப்பையும் அனுபவிக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்காப்பில் தேசிய சேவையாளர்களின் பங்கு அளப்பரியது என்று கூறிய துணைப் பிரதமர், கொள்ளைநோய் பரவிய காலத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.

அப்போது சோதனைச் சாவடிகளை இயக்குவதற்கும் மருத்துவமனைகளுக்கு உதவியாகவும் ஆயுதப் படை செயல்பட்டது.

சாஃப்ராவின் புதிய பொழுதுபோக்கு மன்றம், சிங்கப்பூரின் வடமேற்கு வட்டாரத்தில் உள்ள 90,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஆயுதப் படையின் தேசிய சேவையாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சேவையாற்ற முடியும்.

சுமார் 29,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பொழுதுபோக்கு மன்றம், ஜூனில் சேவைகளை வழங்கத் தொடங்கியது. அப்போது முதல் 700,000க்கும் மேற்பட்டவர்களை அது ஈர்த்துள்ளது.

சுவா சூ காங் பூங்காவுக்குள் அது அமைந்துள்ளது. மழையில் நனையாமல் இருக்க மேற்கூரையுடன் நீச்சல் குளம், 150 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை, 18 தடம் கொண்ட உருட்டுப் பந்து நிலையத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட பொழுதுபோக்கு வளாகம் போன்ற வசதிகள் அதில் உள்ளன.

சூரிய சக்தித் தகடுகள், மழைநீர் சேமிப்பு போன்ற பசுமை சார்ந்த அம்சங்களும் பொழுதுபோக்கு மன்றத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.

குறிப்புச் சொற்கள்