எம்ஆர்டி பயணிகளிடம் பாதுகாப்புச் சோதனை

எம்ஆர்டி பயணிகளிடம் பாதுகாப்புச் சோதனை

2 mins read
a51f30fa-e928-411f-9e72-545f1d5a7a9e
நவம்பர் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் எம்ஆர்டியில் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எம்ஆர்டி பயணிகளிடம் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படவிருக்கிறது.

நவம்பர் 30ஆம் தேதி வடக்கு-தெற்கு தடம் அல்லது தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்திற்கு உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலையம் வழியாகப் பயணம் செய்யும் பயணிகளிடம் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படும்.

அப்போது பயணிகளின் உடைமைகள் எக்ஸ்ரே சாதனங்களுக்கு உட்படுத்தப்படும்.

உலோகக் கண்டுபிடிப்பு நுழைவாயில் வழியாக பயணிகள் நடந்து செல்ல கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

பொதுப் போக்குவரத்து அவசரகால ஆயத்தநிலை பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அன்று காலை 10.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை பொது இடத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தப்படும் என்று நவம்பர் 23ஆம் தேதி ரயில் சேவை நிறுவனமான எஸ்எம்ஆர்டியும் நிலப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்துள்ளன.

வடக்கு-தெற்கு நடைமேடைக்கு அருகே நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் ‘எக்சிட் 3’க்கு அருகில் உள்ள கட்டண நுழைவாயில்களுக்கு அனுப்பப்படுவார்கள். தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் நடைபாதைக்கு அருகில் நுழைபவர்கள் ‘எக்சிட் 4’ வழியாகச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

இந்தச் சோதனையின்போது கூடுதல் நேரம் பயணத்திற்குத் தேவைப்படும் என்பதை பயணிகள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பெரிய உடைமைகளை வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து செல்ல அதிக நேரம் தேவைப்படலாம். சக்கர நாற்காலி மற்றும் நடக்கும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பயணிகளுக்கு நிலைய ஊழியர்கள் உதவி செய்வார்கள் என்று கூட்டு அறிக்கை தெரிவித்தது.

ரயில் நிலைய பாதுகாப்புச் சோதனை இயக்கம், ‘எஸ்ஜிசெக்யூர்’ எனும் தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.

சிங்கப்பூர் எதிர்நோக்கும் பாதுகாப்பு மிரட்டல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவசரகாலத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை பொதுமக்கள் அறியவும் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படுகிறது.

புகிஸ், அங் மோ கியோ, நியூட்டன், ஹாலந்து வில்லேஜ், ஹவ்காங், ஜூரோங் ஈஸ்ட் மற்றும் ஹார்பர்ஃபிரண்ட் ஆகிய எம்ஆர்டி நிலையங்களிலும் இதேபோன்ற சோதனை நடத்தப்படவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்