நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப் படிப்பை கைவிட்ட ஃபோன்சேகா வன்னேசெரிகா ஹேம ரஞ்சினி என்ற மாது அந்தப் பல்கலைக்கழகத்தில் தான் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றதாக போலி ஆவணம் தயாரித்தார்.
அதை வைத்துக்கொண்டு 44 வயதான அவர் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை குறைந்தது ஐந்து நிறுவனங்களை ஏமாற்றி வேலை பார்த்து வந்துள்ளார்.
இதன் தொடர்பில் நவம்பர் 23ஆம் தேதியன்று அவர் மீதான ஏமாற்று வேலை, போலி ஆவணம் தயாரித்தது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்படும்.
போலி பட்டச் சான்றுடன் அவர் வால்ட் டிஸ்னி, மார்ஷல் கேவன்டிஷ், போன்ற நிறுவனங்களில் $4,200க்கும் $6,800க்கும் இடைப்பட்ட சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்.
ஜிசிஇ ‘ஏ’ நிலைக் கல்வி தேர்ச்சி மட்டுமே பெற்றிருந்த திருவாட்டி ஃபோன்சேகா, நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கத்தில் பொறியியல் துறையில் படட்டக் கல்வி பயில 1998ஆம் ஆண்டு சேர்ந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்வி கற்பதில் சிரமத்தைச் சந்தித்ததால் அந்தப் பாடத் திட்டத்தில் இருந்து வெளியேறினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டத.
பின்னர் 2005ஆம் ஆண்டு அவர் கணினி மூலம் பட்டக் கல்விச் சான்றை வடிவமைத்து பொறியியல் துறையில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்றதாக ஆவணம் தயாரித்தார் என்று நீதிமன்றம் அறிந்தது. இவருக்கு டிசம்பர் 6ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.