தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களைப் பராமரித்தவருக்கு விருது

2 mins read
4bec6b4b-e792-4d67-9822-b0cfe4d07d53
தற்காப்புப் படைத்தலைவர் வைஸ் அட்மிரல்ட் ஏரன் பேங்கிடமிருந்து (வலது) விருது பெறும் எம்இ-5 வி. ஜீவா அனந்தன். - படம்: தற்காப்பு அமைச்சு

கிருமிப்பரவல் காலகட்டத்தில், கிருமித்தொற்று நிலவிய சில தங்குவிடுதிகளிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம்களுக்கு நகர்த்திய நடவடிக்கைகளில் தலைமைப் பொறுப்பு ஒன்றை ஏற்ற எம்இ-5 வி. ஜீவா அனந்தனுக்கு கொவிட்-19 பிரிவிலான தேசிய விருது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அளிக்கப்பட்டுள்ளது.

சேவையை நல்ல முறையில் ஆற்றுவதற்குப் பரிவுணர்வு தேவை. வரம்பில்லாமல் உழைத்துக் களைப்பவர்களிடையே பரிவு தேயும் அபாயம் உள்ளது என்ற உண்மையை அறிந்து, தம் தலைமையின்கீழ் பணியாற்றுவோரின் நலனைத் தொடர்ந்து கவனிப்பதாகக் கூறுகிறார் இந்த ராணுவத் தலைவர்.

2022ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமிப்பரவல் உச்சத்தை எட்டிய காலகட்டம், திரு ஜீவாவுக்கும் அவரது சக குழுவினருக்கும் சவால்மிக்க காலகட்டமாக இருந்தது.

அவசர தங்குமிட பணிக்குழு, போர்க்கால ஆதரவுச் சேவை பணிக்குழு ஆகியவற்றில் பணியாற்றும் திரு ஜீவா, நூற்றுக்கணக்கான ஊழியர்களின் தங்கும் வசதிகள், நாசித்திரவச் சோதனைக்கான ஏற்பாடுகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முதலியவற்றைத் திட்டமிடும் பணியில் ஈடுபட்டார்.

தடுப்பூசியும் ஏஆர்டி சோதனையும் இல்லாத காலகட்டத்தில் ஊழியர்கள் எதிர்கொண்ட கடும் வேதனையை அவர் நினைவுகூர்ந்தார். சவால்மிக்க அந்த காலகட்டத்தில் விடுப்பு நாள் இன்றி ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து பணியாற்றியபோது சக ஊழியர்களும் குடும்பத்தினரும் ஊக்கம் தந்ததாகக் கூறினார் இரு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ஜீவா.

“எல்லாரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்து நன்கு பார்த்துக்கொண்டனர். அந்நேரத்தில் என்னைச் சுற்றியிருந்தோரின் உன்னத நிலையை என்னால் காண முடிந்தது,” என்று அவர் கூறினார்.

“உணவு, கழிப்பறை போன்ற விவகாரங்கள் குறித்து அவர்கள் கருத்து கூறும்போது அதனை நாங்கள் செவிமடுத்தோம். உரிய மாற்றங்களைச் செய்து எங்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தினோம்,” என்று திரு ஜீவா கூறினார்.

2021ல் கொவிட்-19 கிருமியின் ‘டெல்ட்டா’ உருமாற்றத்தின்போது, ரென் சீ மருத்துவமனையில் இரண்டு மாதங்களாக திரு ஜீவாவும் அவர்கீழ் பணிபுரிந்த அதிகாரிகளும் மனிதவள உதவியை ஆற்றினர்.

டான் டோக் செங் மருத்துவமனை நிர்வாகத்தினருடன் ஒத்துழைத்து சிங்கப்பூர் ஆயுதப்படையின் தாதியர்களும் மருத்துவ உதவியாளர்களும் இடம்பெற்ற குழுவை அவர் அமைத்திருந்தார்.

மருத்துவமனைவாசிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்க்கும் இடையிலான காணொளிப் பரிமாற்றங்களுக்கும் இவரது குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஏற்பாட்டினால் மருத்துவமனைவாசிகள் ஆனந்தக் கண்ணீர் சிந்திய தருணங்கள் மறக்க முடியாதவை என்கிறார் திரு ஜீவா.

இந்த விருது தமக்கு அடக்கத்தை உணர்த்துவதாக அவர் கூறினார். ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியின் மேன்மையையும் சவால்மிக்க சூழலில் சேவையாளர்கள் கொண்டுள்ள அற உணர்வையும் இந்த விருது அங்கீகரிப்பதாக திரு ஜீவா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்