தங்கக் கனவுகளோடு ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ நெடுந்தொலைவோட்டம்

2 mins read
1d723cd3-ce30-4fb4-8139-7c66f4f018ab
2022 ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ நெடுந்தொலைவோட்டத்தின் பங்கேற்பாளர்கள். - படம்: ‘ஐயர்ன்மேன்’ குழுவினர்

டிசம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர்’ நெடுந்தொலைவோட்டத்தில் இவ்வாண்டு 50,000 பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு சாதனையளவில் 8,400க்கு மேற்பட்ட அனைத்துலக விளையாட்டு வீரர்கள் இதில் பங்கெடுக்கவுள்ளனர். கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு முதன்முறையாக நடைபெறும் தென்கிழக்காசியாவின் ஒரே உலகத் திடல்தட விளையாட்டுத் தங்கச் சின்னப் போட்டியாக அது கருதப்படுகிறது.

‘ஐயர்ன்மேன்’ குழுவின் சந்தோஷ்குமார், ஆகர்ஷனா சரவணன் இருவரும் இதற்குப் பெரும்பங்காற்றியுள்ளனர்.

சொந்த வாழ்க்கை கொடுத்த நம்பிக்கை

2021ல் கொவிட்-19 தொற்றுக்காலத்தின்போது ‘ஐயர்ன்மேன்’ குழுவின் சிங்கப்பூர் பொது மேலாளராகப் பதவியேற்றார் சந்தோஷ்குமார்.

சிறு வயதிலேயே, தன் ஒற்றைத் தாயார் இரு வேலைகளைச் செய்துகொண்டே நால்வர் அடங்கிய குடும்பத்தைத் தாங்கியதைக் கண்டு வளர்ந்தவர் இவர்.

அதனால், உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலிருந்தே பரோட்டா கடை, ‘மெக்டோனல்ட்ஸ்’, மருத்துவமனை போன்ற இடங்களில் பகுதிநேர வேலைகளுக்கு இவர் செல்லத் தொடங்கினார்.

இவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக இருந்தது ‘2009 மீடியாகார்ப் சுபாரு சவால்’.

77 மணி நேரங்களுக்குப் பிறகு இரண்டாம் நிலையில் வந்த அவர், ‘சுபாரு’ காரை வெல்லாவிட்டாலும் ‘பீபல்சர்ச்’ ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் கவனத்தைப் பெற்றார்.

2011ல் ‘எஃப்1’ சிங்கப்பூர், விற்பனை மேலாளரைத் தேடிக்கொண்ஂடிருந்தபோது ‘பீபல்சர்ச்’ அவரை முன்மொழிந்தது. வாய்ப்பை நழுவவிடாமல் முன்னேறி இந்நிலைக்கு வளர்ந்துள்ளார் சந்தோஷ்குமார்.

பல பொறுப்புகளை ஏற்கும் ஆகர்ஷனா

‘ஐயர்ன்மேன்’ சமூகப் பிரிவில் துணை மேலாளராகப் பணிபுரிகிறார் ஆகர்ஷனா சரவணன்.

தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் பெருந்தாக்கம் ஏற்படுத்தும் இவர், 2021, 2022ஆம் ஆண்டுகளில் இந்த நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்றார்.

‘எஃப்1 பிட்’ கட்டடத்தில் டிசம்பர் 1ஆம் தேதி, இரவு 7 மணிக்குத் தொடங்கவிருக்கும் ‘கிட்ஸ் டேஷ்’ ஓட்டத்திலும் திருவிழாவிலும் இவரது புத்தாக்கங்கள் இடம்பெறும்.

இவரது 5, 7 வயது மகன்களோடு உற்றார் உறவினர் பலரும் ஓட்டத்தில் பங்குபெறவுள்ளனர்.

“மேன்மேலும் பல இந்தியர்கள் தமக்கென உடல்நல இலக்குகளை வகுத்துக்கொண்டு இத்தகைய ஓட்டங்களில் பங்குபெறவேண்டும்,” என்கிறார் ஆகர்ஷனா.

பிரபலங்களை இணைக்கும் ஓட்டம்

‘கிட்ஸ் டேஷ்’ ஓட்டத்தைத் தொடங்கிவைத்து, தம் கைப்பட பதக்கங்களையும் வழங்கி சிறுவர்களை உற்சாகப்படுத்தவுள்ளார் சிங்கப்பூரின் தங்க மங்கை சாந்தி பெரேரா.

நவம்பர் 30ஆம் தேதி, வியாழன் மாலை 6 மணிக்கு, மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் பொதுமக்கள் உள்ளூர், வெளியூர் ஓட்டப்பந்தய வீரர்களுடன் நேரில் உரையாடலாம்.

டிசம்பர் 2ஆம் தேதி 5,10 கிலோ மீட்டர் ஓட்டங்களும் டிசம்பர் 3ஆம் தேதி அரை, முழு நெடுந்தொலைவோட்டங்களும் நடைபெறும்.

ஓட்டங்களுக்குப் பதிவுசெய்ய https://singaporemarathon.com/ எனும் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்