சமூகம் உருவாக்கிய இயற்கை பூங்காவுக்கு வயது 30

சமூகம் உருவாக்கிய இயற்கை பூங்காவுக்கு வயது 30

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Nov 2023 - 4:27 pm

2 mins read

சிங்கப்பூரின் ஒரே ஈரநிலப் பாதுகாப்பு வனப்பகுதிக்கு முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனைக் கொண்டாட பல்வேறு இலவச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை ஆர்வலர்கள் இந்தக் கொண்டாட்டங்களில் இலவசமாகப் பங்கேற்கலாம்.

சிங்கப்பூரின் ஆகப்பெரிய சதுப்புநில வனப் பகுதியான சுங்கை பூலோ ஈரநிலப் பாதுகாப்பு வனப்பகுதியில் நவம்பர் 25ஆம் தேதி பார்வையாளர்களுக்கான புதிய தளம் திறக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் யோசனைகளுக்கு செவிமடுத்து அங்குள்ள முக்கிய பாலம் பார்வையாளர்களுக்கான தளமாக மாற்றப்பட்டுள்ளது.

நியோ டியவ் கிரசென்டில் உள்ள சதுப்புநிலப் பகுதியிலிருந்து இந்த தளத்திற்கு நேரடியாக செல்லலாம். பார்வையாளர்கள் அங்கிருந்தபடியே பரந்த அளவில் இயற்கையையும் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம்.

30வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லிம் சூ காங் இயற்கைப் பூங்காவில் உள்ள சீரமைக்கப்பட்ட கேஷின் ஹவுசுக்கு வழிகாட்டும் சுற்றுலா, புகைப்பட வகுப்புகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலனித்துவகால வீட்டையும் 18 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இயற்கைப் பூங்காவையும் ரசிக்க முன்பதிவு அவசியம்.

நவம்பர் 25ஆம் தேதி 30வது ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்க நாளில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ, சமூகத்தின் முயற்சிகளால் சதுப்புநிலப் பகுதி உருவானதாகத் தெரிவித்தார்.

1980களில் பறவைகளைக் கண்காணிக்கும் ஆர்வலர்கள் சுங்கை பூலோ குளங்களையும் சதுப்பு நிலப் பகுதிகளையும் கண்டுபிடித்தனர். அவை ஓய்வு எடுக்கவும் இடம் மாறும் கரையோரப் பறவைகளுக்கு உணவளிக்கவும் பயன்படுத்தப்பட்டன.

இக்குழுவினர் இப்பகுதியைப் பாதுகாப்பதற்காக எடுத்த கூட்டு முயற்சியில் சுங்கை பூலோ இயற்கைப் பூங்கா உருவானது என்று அமைச்சர் லீ குறிப்பிட்டார்.

1993ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இந்தப் பூங்கா திறக்கப்பட்டது.

இப்பகுதி பின்னர் இயற்கை வனப்பகுதியாக 2002ல் அரசிதழில் வெளியிடப்பட்டு சுங்கை பூலோ ஈரநிலப் பாதுகாப்பு வனப்பகுதி என பெயர் மாற்றம் கண்டது.

குறிப்புச் சொற்கள்