சிறந்த சுகாதாரத்திற்கு பலதுறை மருந்தகங்கள் சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: ஓங் யி காங்

சிறந்த சுகாதாரத்திற்கு பலதுறை மருந்தகங்கள் சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: ஓங் யி காங்

2 mins read
b1dbab07-df61-4b2c-abf0-923044c363b1
செம்பவாங் பலதுறை மருந்தகத்தின் திறப்பு விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், செம்பவாங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழவும், நல்ல சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றவும் பலதுறை மருந்தகங்கள் சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

செம்பவாங் பலதுறை மருந்தகம் சனிக்கிழமை திறக்கப்பட்டபோது மேற்கண்டவாறு அமைச்சர் கூறினார்.

பலதுறை மருந்தகங்கள் எப்போதும் மக்களுக்கு மிக அருகில் இருப்பதை உறுதி செய்ய சிங்கப்பூர் அணுக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரின் 25வது பலதுறை மருந்தகமான செம்பவாங் பலதுறை மருந்தகம், புக்கிட் கேன்பெராவின் விளையாட்டு மற்றும் சமூக மன்றத்தில் அமைந்துள்ளது. அங்கு ஏற்கெனவே பெரிய ‘ஆக்டிவ் எஸ்ஜி’ உடற்பயிற்சி நிலையமும், மூத்தோர் மற்றும் குழந்தைகளுக்கான சேவை நிலையங்களும் உள்ளன.

பிடோக், பொங்கோல் பலதுறை மருந்தகங்களுக்குப் பிறகு இம்மாதிரியான அமைப்பில் அமையும் மூன்றாவது செம்பவாங் பலதுறை மருந்தகம்.

2030ஆம் ஆண்டுக்குள் தோ பாயோவிலும் இதேபோன்ற அமைப்பில் ஒரு பலதுறை மருந்தகம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நோய்களைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல் மக்களின் சுகாதார மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆரோக்கியமான உணவு வகைகளைச் சமைப்பது, உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகள் போன்றவற்றையும் எடுத்துக்கூறி வருகிறது அமைச்சு.

சர்க்கரை குறைவான பானங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உணவங்காடி நிலையங்களிடம் அமைச்சு அறிவுறுத்தி வருவதை அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

மேலும் கொவிட்-19 நோய்ப்பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மூத்தோரும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களும் ஆண்டிற்கு ஒருமுறை கொவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் திறப்பு விழாவின்போது நினைவூட்டினார் அமைச்சர் ஓங்.

திறப்பு விழாவில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயரும் கலந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்
சுகாதார அமைச்சுசுகாதாரம்