தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் பாம்புகள் துன்புறுத்தி கொல்லப்படும் சம்பவங்கள்: விலங்குநல அமைப்பு கவலை

2 mins read
5b05818d-e036-46e4-960a-05e4d9e9a90d
பூன் லே பிளேஸ் உணவங்காடி சந்தையில் துன்புறுத்தப்பட்ட இரண்டு மீட்டர் நீள மலைப்பாம்பு. - ஏக்கர்ஸ்/ஃபேஸ்புக்

சிங்கப்பூரில் பாம்புகள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொல்லப்படுவது தொடர்பாக ஆண்டுக்கு சராசரியாக 14 சம்பவங்கள் பற்றி புகார் வந்துள்ளதாக ‘ஏக்கர்ஸ்’ எனப்படும் விலங்கு நல ஆராய்ச்சி மற்றும் கல்விச் சங்கம் தெரிவித்து உள்ளது.

இது கடந்த எட்டு ஆண்டுகளின் நிலவரம். பாம்புகள் துன்புறுத்தப்பட்டு, கொதிக்கும் நீரை ஊற்றி, பூச்சிமருந்துகளைப் பயன்படுத்திக் கொல்லப்படும் சம்பவங்கள் இங்கு நிகழ்ந்து உள்ளன.

சில சம்பவங்களில் கடுமையான ஒட்டும் தன்மைகொண்ட பசையுடனான பொறிகளிலும் பாம்புகள் சிக்க வைக்கப்படுகின்றன என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இங்கு நிகழ்ந்த சில சம்பவங்களையும் அது உதாரணமாகக் கூறியுள்ளது.

கார் இயந்திரம் ஒன்றினுள் மாட்டிக்கொண்ட 2 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் வெளியே இழுத்தபோது அந்தப் பாம்பிற்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. மேலும், அதன் தோல் உரிந்ததோடு வாயிலிருந்து ரத்தமும் வெளியேறியது.

மற்றொரு சம்பவம் பூன் லே பிளேஸ் உணவங்காடி சந்தையில் நிகழ்ந்தது.

சுமார் 2 மீட்டர் நீளமான மலைப்பாம்பு ஒன்று பிளாஸ்டிக் வாளிகளாலும் பெட்டிகளாலும் திரும்பத் திரும்ப அடித்துத் துன்புறுத்தப்பட்டதால், அந்தப் பாம்பு வெட்டுப்பட்டு இறந்தது.

இச்சம்பவம் தொடர்பாக உணவகம் ஒன்றின் உதவியாளரான ரிக்கி சியோங், 54, என்பவருக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பாம்புகள் துன்புறுத்தல் தொடர்பான சொற்பத் தகவல்களே இவை.

உண்மையில் சிங்கப்பூரில் பாம்புகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனவா என்பதற்குப் போதிய தகவல்கள் இல்லை என்று ஏக்கர்ஸ் அமைப்பின் இணை தலைமை நிர்வாகி அன்பரசி பூபால் தெரிவித்து உள்ளார்.

“பாம்புகள் கொல்லப்படுவதும் அவற்றின் சடலம் அப்புறப்படுத்தப்படுவதும் பற்றி ஏக்கர்ஸ் அமைப்புக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. அதனால், பாம்புகள் துன்புறுத்தல்கள் தொடர்பான துல்லியமான விவரங்கள் இல்லை,” என்றார் அவர்.

பூச்சி மருந்தை பாம்புகள் மீது தெளிப்பது, அவற்றை மிதிப்பது, துடைப்பத்தால் நசுக்குவது போன்ற சம்பவங்கள் கவலைக்குரியவை என்றார் திருமதி அன்பு.

குறிப்புச் சொற்கள்