தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

153 மாணவர்களுக்கு சிவதாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரி­ய கல்வி உதவி நிதி

2 mins read
6c5c68fb-60ad-4663-9da7-0e8bd1907ac7
சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியத்தின் கல்வி உதவித் தொகையைப் பெற்றவர்களுடன் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் (நடுவில்). வலக்கோடியில் இந்தக் கல்வி உதவி நிதிக் குழுவின் தலைவர் என். புருஷோத்தமன். - படம்: டினேஷ் குமார்

சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரி­யக் கல்­வி­நிதித் திட்­டம் இவ்­வாண்டு 153 மாண­வர்­க­ளுக்கு $287,500 அள­வி­லான உத­வித்­தொகையை வழங்­கி­யுள்ளது.

2012ஆம் ஆண்டுமுதல் ஆண்­டு­தோ­றும் உயர்­கல்வி மாண­வர்­க­ளுக்கு நிதி உதவி வழங்கி வரும் இத்திட்டத்தின் மூலம் இவ்­வாண்­டு­டன் மொத்­தம் $5.6 மில்­லி­யனுக்கு மேல் நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

நவம்பர் 26ஆம் தேதியன்று ஸ்ரீ ஸ்ரீ­நி­வாசப் பெரு­மாள் கோயி­லின் பிஜிபி மண்­ட­பத்­தில் நடைபெற்ற இந்த உதவித்தொகை வழங்கும் விழாவில் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கினார். 

பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­கள், தொழில்­நுட்பக் கல்­விக்­க­ழ­கங்­கள், பொதுப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள், தனி­யார் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஆகியவற்றைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற்று பயனடைந்தனர். 

அவ்வாறு பயனடைந்தவர்களுள் தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்கு வளாகத்தில் சமூக பராமரிப்பு மற்றும் சேவை பிரிவில் இரண்டாம் ஆண்டு பயிலும் தாரிணி கிருஷ்ணனும் ஒருவர். 

எதிர்காலத்தில் இயன்மருத்துவராகும் (Physiotherapist) கனவுடன் இருக்கும் இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றும் தாயாரின் வருமானத்தை மட்டுமே இக்குடும்பம் நம்பியுள்ளது. 

இச்சூழலில் தனக்கு கிடைத்துள்ள $1,000 உதவித்தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தன் தம்பி தங்கையரும் இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவதாகவும் தாரிணி தெரிவித்தார். 

இவரைப் போலவே நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் தாயும் மகனும் உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். 47 வயதாகும் திருவாட்டி விசாலாட்சி சுப்பையா தாதிமைத் துறையில் இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பைப் படித்து வருகிறார். 

குடும்பச் சூழலால் உயர்கல்வியை இளம்வயதில் மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் குடும்பத்தினரின் ஊக்கத்தினால் தற்போது படித்துவரும் இவர் $1,250 உதவித் தொகையைப் பெற்றுள்ளார். 

இதே தொகையைப் பெற்றுள்ள இவரின் 18 வயது மகன் ஞானசெல்வன் பிரகாஷ், பொதுப் பொறியியல் துறையில் பட்டயப்படிப்பு (Diploma in Common Engineering) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

“எங்கள் இருவருக்குமே உதவித்தொகை கிடைத்தது குடும்பப் பொருளாதாரச் சுமையைப் பெருமளவு குறைக்கும். மேலும் தொடர்ந்து நன்கு படிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளிக்கிறது,” என்று கூறினார் ஞானசெல்வன். 

மூன்று பிள்ளைகளுக்கு தாயான திருவாட்டி இந்திராதேவி செல்வராஜூ. 17 ஆண்டுகளாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றி வருகிறார். 

தற்போது ‘எல்ஏ ட்ரோப் சிங்கப்பூர்’ (LA Trobe Singapore) கல்வி நிலையத்தில் தாதிமைத் துறையில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பயிலும் இவர் தன்னுடைய ஆண்டு கல்விக் கட்டணத்தில் ஐம்பது விழுக்காட்டுத் தொகையை உதவித் தொகையாகப் பெற்றுள்ளார். 

“நீண்ட இடைவெளிக்குப் பின் கல்வியைத் தொடரும் எனக்கு இந்த உதவித்தொகை மிகுந்த உற்சாகமளிக்கிறது. குடும்ப பொருளாதார நெருக்கடிக்கு இது பேருதவியாக இருக்கும்,” என்று கூறினார் இந்திராதேவி. 

குறிப்புச் சொற்கள்