தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணிப்பெண்ணுக்கு விருது தேடித்தந்த பாசம்

2 mins read
c25999be-65d1-4ad8-ba2e-5166aa94cc2b
பணிப்பெண் சசிகலாவுடன் (நடுவில்) அவர் வேலை செய்யும் குடும்பத்தின் மகன் டி கௌதம், டி திரிஷா. - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறந்த முறையில் நடந்துகொண்ட பணிப்பெண்கள் எண்மருக்கும் அவர்களது முதலாளிகளுக்கும் ‘சிறந்த முன்மாதிரி வெளிநாட்டு இல்லப் பணியாளர் மற்றும் முதலாளிகள்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

பெண்டமியர் வட்டாரத்திலுள்ள மனிதவள அமைச்சின் சேவை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 26) நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ‘ஃபாஸ்ட்’ எனப்படும் சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சிக்கான வெளிநாட்டு இல்லப் பணியாளர் சங்கம் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூருக்கான இலங்கை, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள், ஊழியர் நல அமைப்புகளின் தலைவர்கள், பணிப்பெண்கள், முதலாளிகள் என ஏறக்குறைய 600 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விருது பெற்றவர்களில் ஒருவரான பணிப்பெண் சசிகலா சக்திவேலும், 43, அவரது முதலாளியின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் இருப்பதாக தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.

இலங்கையின் சப்ரகமுவ மாநிலத்தைச் சேர்ந்த திருவாட்டி சசிகலா, தமது 22 வயதில் சிங்கப்பூரில் பணியாற்றத் தொடங்கினார். சொந்த ஊரில் தொழிற்சாலைப் பணியாளராக இருந்த இவருக்குப் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்ட அனுபவம் இல்லை.

‘‘முன்பயிற்சி இல்லாமல் விழிபிதுங்கி நின்ற எனக்கு அன்பு காட்டிய என் முதலாளி கீதா மங்களம், வேலைகளை எனக்குப் பொறுமையுடன் கற்றுத்தந்தார். என் முதலாளியின் குடும்பத்தை என் சொந்தக் குடும்பத்தைப் போலவே எண்ணி வேலைசெய்தேன்,” என்று அவர் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான விமானச் சீட்டுக்கான செலவை தம் முதலாளியின் குடும்பம் எப்போதும் ஏற்றுக்கொள்வதாகத் திருவாட்டி சசிகலா கூறினார். அத்துடன், அந்தக் குடும்பம் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களின்போதும் இவரை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

திருவாட்டி சசிகலா வேலைக்குப் புதிதாக வந்தபோது முதலாளி கீதா, இரண்டாவது மகள் திரிஷாவை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். முதல் மகன் கெளதமுக்கு அப்போது இரண்டு வயது. இப்போது இருவருமே இருபது வயதைக் கடந்தபோதும், ‘அக்கா’ என்று திருவாட்டி சசிகலாவை அழைக்கும் இந்த இளையர்கள் அவர்மீது அதிக பாசம் கொண்டுள்ளனர்.

“அக்கா சசிகலா எனக்குத் தமிழ் கற்றுத் தருவார். நாங்கள் எல்லோரும் சுற்றுப்பயணம் சென்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை,” என்று பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவரான திரிஷா, 20, கூறினார்.

பெற்றோர்களின் சார்பாக விருது பெற்ற தேசிய சேவையாளர் டி. கெளதம், 23, மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகக் கூறினார். “அக்கா எப்போதும் எங்களுக்கு உதவி செய்வார். நாங்கள் அக்காவை வேறொருவராகக் கருதியதில்லை,” என்று அவர் கூறினார்.

ஐந்து உடன்பிறந்தோரைக் கொண்டுள்ள திருவாட்டி சசிகலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தம் முதலாளியின் இரு பிள்ளைகளை மிகவும் நேசிப்பதாகக் கூறும் திருவாட்டி சசிகலா , இந்தக் குடும்பத்தைவிட்டுப் பிரிய மனமில்லை என்கிறார்.

“என் முதலாளியின் வீடே என் வீடாகவும் சிங்கப்பூரே என் நாடாகவும் கருதுகிறேன்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்