சிங்கப்பூரில் அதிகரித்துவரும் மோசடிகளைத் தவிர்க்கும் உத்தியாக, யுஓபி, ஓசிபிசி, டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மின்னிலக்க முறையில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு பதிலாக வங்கிகளில் நேரில் முன்னிலையானால் மட்டுமே பணம் எடுக்கும் வசதி இந்த வாரம் முதல் அறிமுகம் காண உள்ளது.
இந்த வசதி யுஓபி, ஓசிபிசி வங்கிகளில் நவம்பர் 30ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். டிபிஎஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை நவம்பர் 27ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 7ஆம் தேதி வரை கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை பாதுகாப்பாக கணக்கில் பூட்டி வைக்கும் இந்த வசதி மோசடிக்காரர்கள் வங்கிக் கணக்குக்குள் ஊடுருவி பணத்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்கும்.
இது குறித்து விளக்கிய யுஓபி, ஓசிபிசி வங்கிகள், வங்கி வாடிக்கையாளர்கள் மின்னிலக்க முறையிலோ அல்லது இணையத்தளம் மூலமோ தங்கள் பணத்தை இவ்வாறு பூட்டி வைக்கலாம் என்றன.
எனினும், அந்த வங்கிக் கணக்குகள் தொடர்ந்து வட்டி ஈட்டும் என்று அவ்விரு வங்கிகளும் தனித்தனி அறிக்கையில் தெரிவித்தன.
‘லாக் அவே அக்கவுண்ட்’ என்ற பெயரில் அறிமுகமாகும் யுஓபி வங்கியின் இந்த வசதி, வங்கிக் கணக்கு தொடங்கும்போது குறைந்தபட்ச வைப்பு நிதி கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக, இந்த புதிய வசதி தற்பொழுது இருக்கும் வங்கி அட்டைகளில் இணைக்க முடியாது என்று யுஓபி வங்கி விளக்கியுள்ளது.
எனினும், வாடிக்கையாளர்கள் மின்னிலக்க முறையில் தொடர்ந்து வங்கியில் பணம் போட, இருப்பு நிதி குறித்து சரிபார்க்க முடியும் என்று அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“இந்த மேம்படுத்தப்பட்ட வங்கி கணக்கு முறை, வாடிக்கையாளர்கள் சந்திக்கக்கூடிய மின்னிலக்க அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, அவர்கள் மோசடிக்காரர்களின் கோரிக்கைகளுக்கு முன்யோசனையின்றி இணங்குவதில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்கிறது,” என்று யுஓபி வங்கி விளக்கியது.
இது குறித்து மேலும் கூறிய யுஓபி வங்கி, இதுபோன்ற பூட்டிவைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தானியக்க அடையாள அட்டை மூலம் பணம் எடுக்க முடியாது என்று தெளிவுபடுத்தியது. எனினும், இந்த வசதி காலப்போக்கில், வங்கி வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் கருத்தைப் பொறுத்து கிடைக்கலாம் என்று தெரிவித்தது.
ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பூட்டி வைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தானியக்க வங்கி அட்டையை, அதன் கடன் அல்லது பற்று அட்டை வசதியுடன், ‘பின்’ எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம் என்று கூறியுள்ளது.