தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கட்டட, கட்டுமான ஆணையம் தகவல்

மின்படிகள் சம்பவங்களில் 97% மக்களின் கவனக்குறைவால் நிகழ்கின்றன

2 mins read
61488dcb-ec27-45ae-a87d-0f7f9f022624
மின்படிகளில் மக்கள் செல்லும் காட்சி. - படம்: எஸ்பிஎச்

இவ்வாண்டு முதல் 10 மாதங்களில் நிகழ்ந்த மின்படிகள் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலானவை அதைப் பயன்படுத்துவோரின் கவனக்குறைவாலும் தவறான வகையில் பயன்படுத்தியதாலும் ஏற்பட்டவை.

இதை நவம்பர் 27ஆம் தேதி கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.

பெரிய, அதிக எடையுள்ள குழந்தைகள் தள்ளுவண்டி, பயணப் பெட்டிகள், கடைப் பொருள்களுடன் கூடிய வண்டிகள் போன்றவற்றுடன் சிரமப்படுவோர் தொடர்பான சம்பவங்கள் அதிக அளவில் உள்ளது. இது மொத்த சம்பவங்களில் 17 விழுக்காடாக உள்ளது.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் பாதிக்கும் மேற்பட்டோர் 55 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோர் என்றும் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 632 மின்படிகள் தொடர்பான சம்பவங்கள் பதிவாயின. இதில் 97%, அதாவது 616 சம்பவங்கள், மின்படிகளைப் பயன்படுத்துவோர் அதை முறைதவறிப் பயன்படுத்தியதே காரணம் என்றும் ஆணையம் தெரிவித்தது.

மின்படிகளைப் பயன்படுத்தும்போது கைப்பிடியைப் பற்றிக்கெள்ளாமல் இருப்பது 16%, தலைசுற்றல் இருக்கும்பொழுது மின்படிகளைப் பயன்படுத்துவது 12%, மின்படிகளில் கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டு கவனமின்றி செல்வது 11%, காலணிகள், அல்லது உடற்பகுதிகள், பெரும்பாலும் சிறுவர்களிடையே, சிக்கும் சம்பவங்கள் 9% என மின்படிச் சம்பவங்கள் தொடர்பான காரணங்களை ஆணையம் பட்டியலிட்டது.

இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட சம்பவங்கள் 3 விழுக்காட்டைவிடக் குறைவு என்றும் ஆணையம் விளக்கியது.

இந்தச் சம்பவங்கள் குறித்து கருத்துரைத்த ஆணையம், மின்படிகளைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த கூடுதல் திட்டங்கள் அவசியம் எனச் சுட்டியது.

“அதிகமான மின்படிச் சம்பவங்களில் அதைப் பயன்படுத்துவோர் நடந்துகொள்ளும் விதமே காரணம் என்பதால் மின்படிகள் பயன்படுத்தும் அனைவரும் அவற்றைக் கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த, குறிப்பாக முதியோர் மற்றும் சிறு வயது பிள்ளைகளின் பெற்றோர் ஆகியோரிடையே, சமூக, இந்தத் துறை சார்ந்த பங்காளிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று ஆணையத்தின் மின்சார, இயந்திரவியல் பொறியாளரான டியோ ஓர் ஹாய் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்