பிலிப்பீன்ஸ் இல்லப் பணிப்பெண்கள் குப்பையில் வீசப்படும் பொருள்களில் தயாரிக்கப்பட்ட உடையை அணிந்து நடை பயின்று அசத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நான்கு மணி நேர ஓய்வு நேரத்தில் ஏறக்குறைய 12 பணிப்பெண்கள் ‘டிராஷியன் ஷோ’வில் பங்கேற்று வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.
மவுண்ட்பேட்டன் சாலையில் உள்ள எச்எஃப்எஸ்இ அனைத்துலகப் பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இல்லப் பணிப்பெண்களின் உடல் முழுவதும் போத்தல் மூடிகள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறைகள், செய்தித் தாள், மறுபயனீட்டு பைகள், பிளாஸ்டிக் கரண்டி போன்றவற்றால் மூடப்பட்டிருந்தது.
சுற்றுச் சூழலையும் கடல் வாழ் உயிரினங்களையும் பாதிக்கும் மனிதர்களால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் போன்ற பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நிகழ்ச்சி அமைந்தது.
சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுகளாக இல்லப் பணிப்பெண்ணாக இருந்து வரும் செல்வி ராக்வெல் எல்லோ, 40, இந்நிகழ்ச்சியில் அணிவதற்கான பாவாடையைத் தைக்க மூன்று மாதங்கள் ஆனதாகத் தெரிவித்தார்.
“ஐஸ்கிரீம் தாள், உருளைக்கிழக்கு சிப்ஸ் உறைகள், தாளில் செய்யப்பட்ட பூக்கள் போன்றவற்றால் உடையை உருவாக்கினேன்,” என்றார் அவர்.
“எப்போதெல்லாம் எனக்கு பலம் இருக்கிறதோ, அப்போதெல்லாம் காலை 8.00 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை உடையை தயாரிப்பதில் ஈடுபடுவேன். இரவு பத்து மணிக்கு நிறுத்திவிடுவேன். என்னுடைய இரண்டு முதலாளிகளும் வயதானவர்கள். அவர்கள் இரவு 10 மணிக்கு படுக்கச் செல்ல வேண்டும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
செல்வி ஜுலியட் டெய்ல்மோடோவும், 45, ஓய்வு நேரத்தில் உடை தயாரிப்பில் ஆர்வமாக ஈடுபடுவார். பதினாறு ஆண்டுகளாக அவர் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார்.
இரண்டு உடைகளை அவர் வடிவமைத்திருந்தார்.
அவற்றில் ஒன்று, ‘பரோ அட் சயா’ என்றழைக்கப்படும் பிலிப்பீன்ஸ் பெண்களின் பாரம்பரிய உடையாகும்.
செல்வி டெய்ல்மோடோ தனது உடையை நெஸ்கஃபே 3-1 காபி உறைகளாலும் செய்தித் தாள் மற்றும் மறுபயனீட்டு பைகளையும் கொண்டு உருவாக்கியிருந்தார்.
இதற்காக 30 பை நிறைய தூக்கி வீசப்பட்ட உறைகளை அவர் பயன்படுத்தியிருந்தார்.
சிங்கப்பூரில் 2022 டிசம்பர் நிலவரப்படி சுமார் 268,500 இல்லப் பணிப்பெண்கள் இருந்தனர். அவர்களில் மூவரில் ஒருவர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்கள்.