சிங்கப்பூர் அரசாங்கம், 800 ஹெக்டர் பரப்பளவுள்ள நிலத்தை உருவாக்கும் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கு அருகே அடுத்த பத்து ஆண்டுகளில் இதற்காக மொத்தம் மூன்று நிலப் பகுதிகள் மீட்கப்படும்.
அங்கு புதிய நீர்முகப்புக் குடியிருப்புகள், பொதுமக்களுக்கான வசதிகள், அது மட்டுமல்லாமல் புதிய நீர்த்தேக்கமும் அமைக்கப்படவிருக்கிறது.
புதிய நிலப்பகுதி ‘லாங் ஐலண்ட்’ என்று அழைக்கப்படும்.
இது, மரினா பே வட்டாரத்தைப் போன்று இரு மடங்கு இருக்கும்.
கடல்மட்ட உயர்வு, திடீர் வெள்ளம் போன்ற இயற்கை அபாயங்களை ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரம் எதிர்நோக்குகிறது. இப்பகுதியில் உள்ள நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து ஐந்து மீட்டர் தாழ்வான இடத்தில் உள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளியுடன் பெரிய அலைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதனைச் சமாளிக்கும் வகையில் புதிய நிலம் அமைக்கப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ‘லாங் ஐலண்ட்’ திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆய்வுகளை இரண்டு பொது அமைப்புகள் மேற்கொள்ளும் என்று நவம்பர் 28ஆம் தேதி அன்று தேசிய வளர்ச்சி அமைச்சரான டெஸ்மண்ட் லீ அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்களின் ஆலோசனைகளும் பரிந்துரைகளும் கேட்டறியப்படும். இத்திட்டம் தீட்டி, வடிவமைத்து, மேம்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்திற்காக மரினா ஈஸ்ட்டிலிருந்து தானா மேரா வரையிலான பகுதியில் மூன்று நிலப் பகுதிகள் மீட்கப்படவிருக்கிறது. கிழக்குக்கோடியில் அமையும் நிலப் பகுதி தானா மேராவிலிருந்து தொடங்கும். மேற்கு கோடியில் உள்ள நிலப் பகுதி மரினா ஈஸ்ட்டிலிருந்து விரிவுபடுத்தப்படும். இதற்கு நடுவில் 3வது நிலப்பகுதி மீட்கப்படும்.
ஒவ்வொரு புதிய நிலப்பகுதிக்கும் இடையே அலைகள் தடுப்பணைகளும் நீரை வெளியேற்றும் சாதனங்களும் இடம்பெற்று இருக்கும்.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க் மற்றும் புதிய நிலப் பகுதிகளின் எல்லைகளில் அமையும் புதிய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தையும் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தையும் இவை குறைக்க உதவும்.
தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம், நில மீட்புத் திட்டத்தில் சிங்கப்பூரின் 18வது நீர்த்தேக்கமும் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தது.
மரினா அணைக்கட்டில் உள்ளது போல ஈஸ்ட் கோஸ்ட்டின் புதிய நீர்த்தேக்கத்தில் கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும். அதிக அலை இல்லாதபோது கனமழை பெய்தால் கூடுதலான நீரை கடலில் கலக்க கதவுகள் திறக்கப்படும். பெரிய அலைகள் ஏற்பட்டால் நீர் வெளியேற்றும் சாதனங்களைக் கொண்டு நீர் வெளியேற்றப்படும்.
இந்த நீர்த்தேக்கத்தில் 5,000 ஹெக்டர் அளவு நீர் தேக்கி வைக்கப்படும். இது, சிங்கப்பூரின் ஆகப்பெரிய நீர்த்தேக்கமான மரினா நீர்த்தேக்கத்தில் பாதி என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய நீர்த்தேக்கம், துடுப்புப் படகு, ‘டிராகன் போட்’ போன்ற விளையாட்டுகளுக்கு இடமாகவும் இருக்கும் என்று திரு டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
வெள்ளத் தடுப்பு வசதிகள் மட்டுமின்றி சிங்கப்பூரின் நீர் விநியோகத்தையும் நிலமீட்பு அதிகரிக்கும் என்றார் அமைச்சர்.

