பாசிர் ரிசில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய திடீர் சோதனையில் கத்தி, ‘நக்கல் டஸ்தர்’ கருவி, 11 கிராம் எடை கொண்ட ‘ஐஸ்’ போதைப்பொருள், போதைப்பொருள் உட்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தக் குடியிருப்புக்குச் சொந்தக்காரரான 24 வயது ஆடவர் ஒருவர், நவம்பர் 19ஆம் தேதி நடந்த இச்சோதனையின்போது சன்னல் வழியாகத் தப்பிக்க முயன்றார்.
நவம்பர் 19 முதல் 24ஆம் தேதிவரை தீவு முழுவதும் நடந்த சோதனையின்போது பிடிபட்ட 71 சந்தேக நபர்களில் அவரும் ஒருவர். அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், காலாங், பொங்கோல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.
ஏறக்குறைய $157,000 மதிப்புடைய போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 881 கிராம் எடைகொண்ட ‘ஹெராயின்’, 137 கிராம் கஞ்சா, ஒரு ‘எரிமின்-5’ மாத்திரை அவற்றில் அடங்கும்.
$22,580.15 பெறுமானமுள்ள ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில், போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 64 வயது சிங்கப்பூர் ஆடவரும் ஒருவர்.
ரெட்ஹில் பகுதியில் உள்ள அவரது குடியிருப்புக்குள் அதிகாரிகள் பலவந்தமாக நுழைய வேண்டியிருந்தது. அங்கு 81 கிராம் ‘ஹெராயின்’, 13 கிராம் ‘ஐஸ்’, $22,580.15 பெறுமானமுள்ள ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

