சிஓஇ உட்பட $140,000க்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கித் தருவதாகக் கூறி நண்பரை ஏமாற்றிய தொழில்நுட்பர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டாய் பூன் புவாட், என்ற அந்த 48 வயது நபருக்கு செவ்வாய்க்கிழமை எட்டுமாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக சிஎன்ஏ வெளியிட்ட தகவல் தெரிவித்தது. அவர் மீது ஒரு ஏமாற்றுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
அவர் மீதான இரண்டாவது குற்றச்சாட்டும் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
2019ல் டாய், 43 வயது நபர் ஒருவரைச் சந்தித்தார்.
அந்த சமயத்தில் அவர் சொத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தார்.
இதனால் இருவரும் சேர்ந்து சில சொத்துகளைப் பார்வையிட்டனர்.
2020ல் தனது நிறுவனம் சைக்கிள் அண்ட் கேரியஜ் நிறுவனத்திடமிருந்து ஒட்டுமொத்தமாக மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வாங்குவதாகவும் தம்மால் அதிக கழிவுடன் மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கித் தர முடியும் என்றும் அந்த நபரிடம் டாய் கூறியுள்ளார்.
டாய்க்கு சைக்கிள் அண்ட் கேரியஜ் நிறுவனத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை. மெர்சிடிஸ் பென்ஸ் காரை மலிவான விலையில் வாங்கித் தருவதாக டாய் கூறியதும் பொய்.
தொடர்புடைய செய்திகள்
முதலில் டாயின் யோசனையை அவர் மறுத்தார்.
சிஓஇ மற்றும் இதர வரிகள் உட்பட ‘சிஎல்ஏ220 மெர்சிடிஸ் பென்ஸ்’ காரை 140,000 வெள்ளிக்கு வாங்கித் தருவதாக டாய் கூறியதை பின்னர் அந்த நபர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்த தமது வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறு அவரிடம் டாய் கூறினார்.
இதில், பாதிக்கப்பட்டவர் 2020 மார்ச் முதல் 2021 பிப்ரவரி வரையில் 22 சமயங்களில் மொத்தம் 22,487 வெள்ளியை டாய்க்கு மாற்றியுள்ளார்.
அந்த நபருக்கு கடைசி வரை மெர்சிடிஸ் பென்ஸ் கார் கிடைக்கவில்லை.
டாய் 2023 மே மாதம் நண்பரை ஏமாற்றியதற்காகக் கைதுசெய்யப்பட்டார்.
ஏமாற்றுக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

