மகளாகத் தத்தெடுக்க விரும்பிய பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல்; ஆடவருக்குச் சிறை, பிரம்படி

2 mins read
5997014a-da00-4620-88ff-6ffa1c038625
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது தாயாரின் மறைவுக்குப் பிறகு சொந்த தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியைத் தத்தெடுக்க இளையர் தலைமைத்துவ மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாளர் ஒருவரும் அவரது மனைவியும் முடிவெடுத்தனர்.

அந்த 16 வயது பெண்ணைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, இரு இளம் பையன்களின் தந்தையான அந்த ஆடவர், பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக்கொண்டு அவரைப் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்.

அந்தக் குற்றச்செயல்கள் 2020 செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாத நடுப்பகுதி வரை நாள்தோறும் நடைபெற்றன.

இளையர் தலைமைத்துவ மேம்பாட்டு நிறுவனத்தில் தற்போது வேலை செய்யாத அந்த 39 வயது ஆடவருக்கு நவம்பர் 28ஆம் தேதியன்று, 10 ஆண்டு சிறையும் ஒன்பது பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் வகையில் குற்றவாளியின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. ஆடவர் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

புதிய குற்றவியல் தண்டனைச் சட்டமான 376AA பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபர் இவர்தான்.

2017 ஜூன் மாதம் அந்தச் சிறுமிக்கு 13 வயதாகும்போது, அவரது தாயார் அவருக்கு முன்னாலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அதைக் கண்ட அந்தச் சிறுமி மன அழுத்தத்துக்கு ஆளானார்.

2018 ஜனவரியில் சிறுமியின் தந்தை அவரிடம் பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டார். இதை அறிந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அச்சிறுமியைத் தந்தையிடமிருந்து பிரித்து அவரை அவரது நெருங்கிய குடும்ப நண்பரிடம் ஒப்படைத்தது.

2028 ஜூனில் தனது நெருங்கிய தோழிகளில் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டதால், அவரும் சவரக்கத்தியால் தன் கை, கால்களை அறுத்துக்கொண்டார்.

காயங்களிலிருந்து குணமானவுடன் அமைச்சு அவரை, அதிர்ச்சிக்குள்ளான சிறுமியரைப் பராமரித்து அவர்களை மீண்டும் சமூகத்துக்குள் ஒன்றிணைக்கும் பணியைச் செய்யும் ஒரு நிலையத்தில் சேர்த்துவிட்டது.

அந்த நிறுவனத்தில் வேலை செய்த குற்றவாளி, நிறுவனம் ஏற்பாடு செய்த சிறுமியர் முகாமில் அந்தப் பெண்ணை முதல் முதலாகப் பார்த்தார். அப்போது தன்னைத் தத்தெடுக்கக்கூடிய ஒரு குடும்பத்தைத் தான் தேடிக்கொண்டிருப்பதாக சிறுமி ஆடவரிடம் சொல்ல, அவரே அந்த சிறுமியைத் தத்தெடுக்க முடிவெடுத்தார்.

அந்தக் குடும்பத்தை ஆய்வு செய்த அமைச்சு, அந்தத் தத்தெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது.

அது முதல் அந்த ஆடவர் அச்சிறுமியிடம் பலமுறை பாலியல் செயல்களைப் புரிந்தார்.

ஆடவரின் தொடர் பாலியல் செயல்களைத் தாங்கிக்கொள்ள முடியாத சிறுமி அதை பற்றி ஆசிரியர் ஒருவரிடம் தெரிவிக்க, ஆசிரியர் அது பற்றி காவல்துறையிடம் புகார் அளித்தார். அதனால் அந்தத் தத்தெடுப்பு நிறுத்தப்பட்டது.

நவம்பர் 28ஆம் தேதி அந்த ஆடவருக்கு $80,000 பிணை வழங்கப்பட்டது. அவர் 2024 ஜனவரியில் தனது தண்டனையைத் தொடங்க அரசு நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்