உணவுத்தட்டில் எலி; அதிர்ச்சிக் காணொளி, விசாரணை

உணவுத்தட்டில் எலி; அதிர்ச்சிக் காணொளி, விசாரணை

படம்: ஸியோங்ஷு காணொளி

28 Nov 2023 - 5:51 pm

1 mins read

உணவுத்தட்டில் எலி இருப்பது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இந்த நிலையில் சிங்கப்பூர் உணவு அமைப்பும் டேங்ஸ் மார்க்கெட்டும் இதனை விசாரித்து வருகின்றன.

டேங்ஸ் மார்க்கெட்டில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

“சம்பவம் தொடர்பான விவரங்களை முழுவீச்சில் சேகரித்து வருகிறோம். பின்னர் ஒரு தேதியில் விவரங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் டேங்ஸ் கூறியிருந்தது.

டேங் பிளாசாவுக்கு அடியில் டேங்ஸ் மார்க்கெட் செயல்படுகிறது. இதனை ஃபெய் சியோங் குழுமம் நடத்தி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளியில் உணவுத்தட்டில் இரண்டு கிண்ணங்களில் உணவும் பக்கத்தில் எலி ஒன்றும் இருப்பதைக் காண முடிகிறது.

எலியிருந்த உணவுத்தட்டு வைக்கப்பட்டுள்ள மேசைக்கு அருகே மற்ற மேசைகள் காலியாகக் காணப்படுகின்றன.

காணொளி எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

ஆனால், நவம்பர் 25ஆம் தேதி மேற்கூரையிலிருந்து எலி விழுந்த பிறகு எடுக்கப்பட்டதாக குடிமக்களுக்கான செய்தித்தளமான ஸ்டோம்ப்பில் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியிருந்தனர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விளக்கம் கேட்டதற்கு “உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். சிங்கப்பூர் உணவு அமைப்பு அமலாக்க மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தாலும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் உணவுப் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும்,” என்று நவம்பர் 27ஆம் தேதியன்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

“விதிமுறைகளை மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்,” என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
உணவு