பொங்கோலில் உள்ள காண்டனிஸ் குடும்ப பாணி டாய் லாவ் உணவகத்தின் உரிமம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிக தடை செய்யப்பட்டுள்ளது.
தனது பணியிடத்தின் தூய்மையைக் கட்டிக்காக்க தவறியதற்காகவும் பூச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதிலிருந்து தவறியதற்காகவும் அந்த உணவகத்துக்குத் தடை விதிக்கப்பட்டது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு நவம்பர் 28ஆம் தேதி தெரிவித்தது.
அந்தத் தற்காலிக தடை நவம்பர் 28ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி வரை நீடிக்கும்.
ஓராண்டுக்கு 14 தண்டப் புள்ளிகளை எடுத்த அந்த உணவகம் தூய்மைக்கேடு, பூச்சி எதிர்ப்பு நடவடிக்கை எடுக்காதது ஆகிய இரு குற்றங்களுக்காக $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மரினா கண்ட்ரி கிளப்பில் உள்ள அந்த உணவகத்தின் உணவு வகைகள் வாடிக்கையாளர்களால் விரும்பி உண்ணப்பட்டன.
பிடோக் உணவங்காடி நிலையத்தில் உள்ள சினாரான் சஹாயா பிடோக் கார்னர் உணவுக் கடைக்கும் நவம்பர் 28ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த மலாய் உணவுக் கடைக்கு 16 தண்டப் புள்ளிகள் வழங்கப்பட்டன. உரிமம் அளிக்கப்பட்ட இடத்துக்கு வெளியே உணவு தயாரித்ததற்காகவும், குறிப்பிட்ட உணவுக்குத் தேவைப்படாத பொருளை உணவில் சேர்த்துக்கொண்டதற்காகவும் பதிவு செய்யப்படாத கடை உதவியாளரை வேலைக்கு அமர்த்தியது ஆகியவற்றுக்கு அந்தக் கடைக்கு $1,700 அபராதம் விதிக்கப்பட்டது என்றும் உணவு அமைப்பு கூறியது.

