தாய்லாந்தில் உரிமம் இல்லாத கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்த சிங்கப்பூர் ஆடவர் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்டார்.
சிங்கப்பூரில் கடன் வாங்கியவர்களைக் குறிவைத்து அவர் தொல்லை கொடுத்ததாக அறியப்படுகிறது.
இரண்டு நாள்கள் கழித்து அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
லுவா சியாங் லோங் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், கடப்பிதழ் இல்லாமலேயே மீன்பிடிப் படகு மூலம் மலேசியாவுக்குச் சென்றார்.
அங்கிருந்து அவர் தாய்லாந்துக்குத் தப்பி ஓடினார்.
இந்நிலையில், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியன்று தாய்லாந்து அதிகாரிகளிடம் லுவா சரணடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தனிமையில் வாடியதாலும் தமது தாயாரைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தாலும் அவர் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியன்று சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
நவம்பர் 28ஆம் தேதியன்று 34 வயது லுவாவுக்கு இரண்டு ஆண்டுகள் ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு $60,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை அவரால் செலுத்த முடியாவிட்டால் கூடுதலாக 12 வாரச் சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.

