‘தாத்தாவைக் கொன்றுவிட்டு தமது உயிரையும் மாய்த்துக்கொண்டார் 15 வயது சிறுமி’

‘தாத்தாவைக் கொன்றுவிட்டு தமது உயிரையும் மாய்த்துக்கொண்டார் 15 வயது சிறுமி’

2 mins read
f8c3d9c0-f1a8-4d52-a34f-255a1e356318
சம்பவ இடத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். - படம்: தமிழ் முரசு

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் 15 வயது சிறுமி ஒருவர் தமது தாத்தாவைக் கொன்றுவிட்டு அருகில் இருந்த கட்டடத்திலிருந்து கீழே குதித்து தமது உயிரை மாய்த்துக்கொண்டதாக அரசாங்க மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

சிறுமியின் செயலுக்கான காரணம் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழ்ந்தது.

84 வயது திரு டியோ ஆன் நீயின் மரணத்தில் அந்த பதின்மவயதுச் சிறுமியைத் தவிர வேறு யாருடைய தொடர்பும் இல்லை என்று தோன்றுவதாக மரண விசாரணை அதிகாரி கிறிஸ்டஃபர் கோ நவம்பர் 29ஆம் தேதியன்று தெரிவித்தார்.

திரு டியோவின் உடலில் ஏழு கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று புளோக் 363 புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31ல் கண்டெடுக்கப்பட்டது.

தமது தாத்தாவைக் கொன்ற பிறகு 15 வயது எல்லிஸ் டியோ, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் உள்ள புளோக் 115ன் 25வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

திரு டியோ, எல்லிஸ் ஆகிய இருவர் மட்டுமே சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டில் இருந்ததாகவும் எல்லிசின் பெற்றோர் அப்போது வீட்டில் இல்லை என்றும் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்தில் நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

எல்லிசின் நாட்குறிப்பை அதிகாரிகள் மீட்டனர்.

தமது தாத்தா மீது தமக்கு எந்த வித வெறுப்புணர்வும் இல்லை என்று எல்லிஸ் அதில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கைப்பேசியைப் பயன்படுத்த தமது தாத்தாவுக்குக் கற்றுக்கொடுப்பதில் சிரமத்தை எதிர்கொண்டதாக எல்லிஸ் எழுதியிருந்தார்.

தமக்குச் சீனமொழியில் சரளமாகப் பேச முடியாததே அதற்குக் காரணம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

தனிமையில் வாடுவதாகவும் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் இருப்பதாகவும் நாட்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாக எல்லிஸ் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்கான அதிகாரபூர்வ ஆவணங்கள் ஏதும் இல்லை.

எல்லிசுக்கு சத்தம் பிடிக்காது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திரு டியோவின் கைப்பேசி எழுப்பிய ஒலி எல்லிசைப் பாதித்திருக்கக்கூடும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத உறவினர் ஒருவர் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த நாளன்று தமது தாத்தாவைக் கொலை செய்வதற்கு முன்பு எல்லிஸ் தமது வீட்டைவிட்டு எங்கும் செல்லவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எல்லிசின் தாத்தா பிற்பகல் 2.30 மணி அளவில் வீட்டை அடைந்ததாக அவர்கள் வசிக்கும் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா காட்டியது.

மாலை 5 மணி அளவில் எல்லிஸ் தமது வீட்டைவிட்டு வெளியே சென்றதாகவும் அப்போது அவரது இடது கையில் கட்டு போடப்பட்டிருந்ததாகவும் காணொளியில் பார்க்க முடிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்