டடா ஓட்டுநர்களுக்குப் பயிற்சி, கூடுதல் ஆதரவு

டடா ஓட்டுநர்களுக்குப் பயிற்சி, கூடுதல் ஆதரவு

2 mins read
9495b441-69f7-4690-ac08-854e1fe4943d
டடா சேவை மையத்தில் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்திடப்பட்டது. - படம்: என்டியுசி
Google News Preferred Icon

இணையவழி ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சி வாய்ப்புகளும் நிதி ஆதரவும் கிடைக்கின்றன.

இதன் தொடர்பாக நவம்பர் 29ஆம் தேதியன்று தனியார் வாடகை கார் சேவை நிறுவனம் டடாவுடன் தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கமும் தேசிய டெலிவரி சாம்பியன்ஸ் சங்கமும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

அதன்படி, வாடிக்கையாளர் சேவைக்கான பயிற்சித் திட்டங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல், தனிப்பட்ட அடையாள முத்திரை ஆகியவற்றை தேர்ந்தெடுக்க இந்த இரண்டு சங்கங்களும் டடா நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்.

இந்த இரு சங்கங்களும் என்டியுசியுடன் தொடர்புடையவை.

ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கூடுதல் கலந்துரையாடல்களை அவை நடத்த இருக்கின்றன.

அத்துடன், ஓட்டுநர்களுடன் இணைந்து செயல்படுவதில் இரு சங்கங்களும் ஒன்றுக்கொன்று ஆதரவு நல்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

புரிந்துணர்வுக் குறிப்பின்கீழ், 200 பயணங்களை நிறைவு செய்த 600 புதிய ஓட்டுநர்களுக்கு ஓராண்டுக்கான என்டியுசி உறுப்பியத்தைக் கழிவு விலையில் டடா வழங்கும். உறுப்பியத்துக்கான கட்டணம் $117.

புரிந்துணர்வுக் குறிப்பு சின் மிங் வட்டாரத்தில் உள்ள மிட்வியூ சிட்டியில் இருக்கும் டடா சேவை மையத்தில் கையெழுத்திடப்பட்டது.

ஓட்டுநர்களின் நலன், சம்பாதிக்கும் ஆற்றல், சர்ச்சைகள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்குத் தீர்வு காணும் விதம் ஆகியவை குறித்து இரு சங்கங்களும் டடா நிறுவனமும் இணைந்து கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இணையவழி ஊழியர்களுக்கான ஆலோசனைக் குழு முன்வைத்த 12 பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி, இணையவழி ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் முத்தரப்புப் பங்காளித்துவப் பணிக்குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது.

பிரதிநிதித்துவ அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று இவ்வாண்டு ஜூலை மாதம் முன்வைக்கப்பட்ட பரிந்துரையையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இணையவழிச் சேவை வழங்கும் நிறுவனத்துடன் இந்த இரண்டு சங்கங்களும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டிருப்பது இது இரண்டாவது முறை.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவை கிராப் நிறுவனத்துடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்