தீவிரவாத சித்தாந்தத்திற்கு சுயமாக ஆளானதன் காரணமாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இருவர், தங்களது மறுவாழ்வு நடவடிக்கைகளில் ‘நல்ல முன்னேற்றம்’ கண்டதால் கடந்த ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்தத் துறை வியாழக்கிழமை (நவம்பர் 30) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சுதர்மான் சமிகின், 51, முஸ்தஃபா சுல்தான் அலி, 60, ஆகிய இருவரும் முன்னெச்சரிக்கையாகத் தடுத்து வைக்கப்படும் அளவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்கவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் விடுவிக்கப்பட்ட இரு ஆடவருக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் நடமாட்டத்தையும் இணையப் பயன்பாட்டையும் ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் விநியோக உதவியாளராகப் பணியாற்றிய சுதர்மான், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2019 ஜூலையில் தடுத்து வைக்கப்பட்டார்.
அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த அன்வார் அல் ஆவ்லகி எனப்படுபவரின் சொற்பொழிவு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைப் பிரசாரத்தைக் கேட்ட பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு சுய தீவிரவாதச் சித்தாந்தத்திற்கு ஆளானார். அன்வார் 2011ஆம் ஆண்டு அமெரிக்க ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் கொல்லப்பட்டவர். உள்துறை அமைச்சு கடந்த 2019 ஆண்டு இத்தகவல்களைத் தெரிவித்து இருந்தது.
2014ஆண்டுக்குள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வன்முறைச் சித்தாந்தத்திற்குள் சென்ற சுதரமான், சிரியாவில் பயங்கரவாதக் குழுவினருடன் இணைந்து சண்டையிட ஆயுதங்களைத் தயார் செய்வதில் முனைப்பு காட்டினார். 2014 ஜூலையில் போதைப்பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட அவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் எண்ணத்தைக் கைவிடவில்லை. விடுதலை செய்யப்பட்ட பின்னர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
கடந்த ஜூலையில் விடுவிக்கப்பட்ட மற்றொரு சிங்கப்பூரரான முஸ்தஃபா, துருக்கியில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் 2015 ஜூலையில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இங்கு தடுத்து வைக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2015 மே மாதம் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இந்த வட்டாரத்தில் உள்ள ஒரு நாட்டுக்குச் சென்ற பின்னர் அங்கிருந்து துருக்கி செல்வதற்கான விமானத்தில் ஏறினார்.
தாம் பின்தொடரப்படுவதைத் தவிர்க்க அவர் அவ்வாறு செய்ததாக உள்துறை அமைச்சு கூறி இருந்தது. துருக்கிய எல்லை வழியாக சிரியாவை அடையத் திட்டமிட்டு இருந்த அவரை துருக்கிய அதிகாரிகள் முன்கூட்டியே கைது செய்துவிட்டனர்.
சிங்கப்பூரில் உள்ள மேற்கத்திய நிறுவனங்களின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கான ஐஎஸ்ஐஎஸ் உத்தரவை நிறைவேற்ற முஸ்தஃபா ஆயத்தமானதும் தெரிய வந்தது.

