ஓடும் ரயிலில் கதவைத் திறக்க முயன்ற மாதை காவல்துறை விசாரிக்கிறது

ஓடும் ரயிலில் கதவைத் திறக்க முயன்ற மாதை காவல்துறை விசாரிக்கிறது

1 mins read
193c7acc-10f1-4a97-ba05-700ce548cb22
பயணி உந்தித் தள்ளியதில் ஒரு கதவு லேசாக நகர்ந்தது. - காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம். ராவன் கியு/ஃபேஸ்புக்

நகரும் எம்ஆர்டி ரயிலின் கதவைத் திறக்க முயன்ற பயணியை காவல்துறை விசாரித்து வருகிறது.

இணையத்தில் பரவிவரும் காணொளிகளில், வடக்கு- தெற்கு ரயில் பாதையில் செல்லும் ரயில்போல் தெரிகிறது. பெட்டி ஒன்றின் கதவைத் திறக்க பயணி ஒருவர் போராடுகிறார். அவரை நிறுத்தச் சொல்லி மற்ற பயணிகள் கத்தும் சத்தம் கேட்கிறது.

சீருடை அணிந்த அதிகாரி ஒருவர் அந்தப் பயணியைத் தடுப்பதற்கு முன்பாக, ஒரு கதவு லேசாக நகர்ந்து, இடைவெளி ஏற்பட்டதைக் காணொளியில் காண முடிகிறது.

நவம்பர் 29ஆம் தேதி, பிற்பகல் 1 மணியளவில் நடந்த அச்சம்பவம் குறித்து நிலைய ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் லாம் ஷூ காய் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் ரயிலுக்குள் நுழைந்து விசாரித்தனர். ஆனால் அந்தப் பயணி ஒத்துழைக்காததுடன் ஆத்திரமடைந்ததாகவும் திரு லாம் மேலும் கூறினார்.

ரயிலிலிருந்து வெளியேற அந்தப் பயணி மறுத்ததால், நிலையங்களைக் கண்காணிக்கும் காவல்துறைப் பிரிவான ‘டிரான்ஸ்காம்’ அழைக்கப்பட்டது.

அங் மோ கியோ நிலையத்தின் பிளாட்பாரத்தில் சுருண்டு படுத்திருக்கும் பயணி.
அங் மோ கியோ நிலையத்தின் பிளாட்பாரத்தில் சுருண்டு படுத்திருக்கும் பயணி. - காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம். ராவன் கியு/ஃபேஸ்புக்

அங் மோ கியோ நிலையத்தின் பிளாட்பாரத்தில் சுருண்டு படுத்திருக்கும் அப்பயணியை டிரான்ஸ்காம் அதிகாரிகள், நிலைய ஊழியர்கள் சூழ்ந்து நிற்கும் படங்கள் இணையத்தில் உள்ளன.

“இந்த நடவடிக்கையால் ரயிலில் இருக்கும் பயணிகள், மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது,” என்றார் திரு லாம்.

எஸ்எம்ஆர்டி அத்தகைய நடத்தையை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது என்றும் காவல்துறை விசாரணைகளில் உதவி வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்