தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு; சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்

2 mins read
7edf50ec-0172-4377-a43b-e0518a6112e6
கொவிட்-19 கொள்ளைநோய் அதிகரிப்புக்கு ஆண்டு இறுதிப் பயணம், குறைந்து வரும் மக்களின் எதிர்ப்புசக்தி எனப் பல காரணங்கள் இருக்கலாம் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் அதிகரிப்பு, குளிர் பிரதேச நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய் அதிகரிப்பு ஆகியவற்றை அடுத்து பொதுமக்களை விழிப்புடன் இருக்கும்படி சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நவம்பர் 19லிருந்து 25ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் கொவிட் நோய்த் தொற்று சம்பவங்கள் இரட்டிப்பாகி 22,094 என்ற எண்ணிக்கையானது என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சு டிசம்பர் 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அதற்கு முந்திய வார நோய்த் தொற்று சம்வங்கள் 10,276 என்ற எண்ணிக்கையில் இருந்ததாகவும் அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

எனினும், அன்றாட சராசரி மருத்துவமனை உள்நோயாளி சிகிச்சை எண்ணிக்கையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளி எண்ணிக்கையும் சீராக உள்ளதாக அமைச்சு விளக்கியது.

நவம்பர் 27ஆம் தேதி நிலவரப்படி, கிருமி வகை ஈஜி.5, அதன் கிளைப் பிரிவு கிருமியான எச்கே.3 ஆகிய வகைகளே உள்ளூரில் பிரதான வகைக் கிருமிகளாக உள்ளதாக அது சுட்டியது.

இவை 70 விழுக்காடு நோய்த் தொற்றுச் சம்பவங்களுக்குக் காரணமாக விளங்குவதாக அறிக்கை கூறியது.

கொவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்புக்கு ஆண்டு இறுதிப் பயணம், குறைந்து வரும் மக்களின் எதிர்ப்புசக்தி எனப் பல காரணங்கள் இருக்கலாம் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.

“தற்போதைய நிலையில், இந்த இரு கிளைப் பிரிவுக் கிருமிகளும் அதிக அளவிலான தொற்று ஏற்படுத்தக்கூடியது என்றோ அல்லது இந்த வகை கிருமித்தொற்று, மற்ற வகையான நோய்க் கிருமிகளைக் காட்டிலும், கடுமையான நோய்க்கு வழிவிடும் என்று கூறுவதற்கோ எந்த அறிகுறியும் இல்லை,” என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

குளிர் பிரதேச நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளபோதிலும் சிங்கப்பூரில் சுவாசம் தொடர்பான நோய் எண்ணிக்கை சீராகவே உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூரில், பிள்ளைகள் உட்பட, சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று அமைச்சு விளக்கியது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம், வடக்கத்திய நாடுகளின் சில பகுதிகளில் சுவாசக் கிருமித் தொற்றும் சளிக்காய்ச்சல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்