பொது வீடமைப்புகளில் பூனைகளை வளர்க்க 34 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்பட்டால், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்போர் இனி பூனைகளை வளர்க்க அனுமதிக்கப்படக்கூடும்
ஒவ்வொரு வீவக வீடும் இரண்டு பூனைகள் வரையிலும் தனியார் குடியிருப்பில் மூன்று பூனைகள் வரை வளர்க்கலாம் என்று நவம்பர் 2ஆம் தேதி பூனை வளர்ப்பு குறித்த உத்தேச கட்டமைப்பு பற்றி அறிவித்த தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ் இவ்வாறு தெரிவித்தார்.
செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளின் உடலுக்குள் நுண்சில்லு ஒன்று பொருத்தப்பட்டு, பூனைகளுக்கு உரிமம் வழங்கப்படும். அதன் மூலம் அவற்றின் வளர்ப்பு முறை, நல்வாழ்வு போன்றவை கண்காணிக்கப்படும்.
2024ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்தப் புதிய மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் இரண்டு மாதங்களுக்குக் கருத்து சேகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று திரு டான், பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் நடைபெற்ற செல்லப்பிராணிகள் தினத்தில் தெரிவித்தார்.
பூனைகளுக்கு நிரந்தரமாக உரிமம் வழங்குவதற்கு முன், உரிமம் தொடர்பான தகுதிகளை உரிமையாளர்கள் பெறுவதற்கு ஈராண்டு இடைவெளி கொடுக்கப்படும்.இந்தக் காலகட்டத்தில் உரிமையாளர்கள் பூனைக்கான உரிமத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மாற்றங்கள் நடப்புக்கு வரும்போது, பூனைகளை உரிமம் இல்லாமல் வைத்திருப்போருக்கு எதிராக நாய் உரிமையாளர்களுக்கு உள்ளதுபோல தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமம் தொடர்பான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத நாய் உரிமையாளர்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இருப்பினும் இது குறித்து சோதனைகளை நடத்தும் விலங்கு மற்றும் கால்நடை சேவை அமைப்பு எடுக்கும் முடிவைப் பொறுத்தது.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு வாரமும் பூனைகள் உயரத்திலிருந்து விழும் ஐந்து சம்பவங்களை விலங்குவதை தடுப்புச் சங்கம் கையாள்கிறது. அதில் இதுவரை எந்த பூனையும் உயிர் பிழைத்ததில்லை என்று குறிப்பிட்டார் அமைச்சர் டான்.

