பருவநிலை தணிப்பு நடவடிக்கைகளை எட்டு முக்கிய துறைகளுக்கு விரிவுபடுத்த, வங்கிகளுக்கும் நிதிக் கழகங்களுக்கும் சிங்கப்பூர் புதிய அளவுகோல்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த அளவுகோல்களைக் கொண்டு, வங்கிகளும் நிதிக் கழகங்களும் பசுமை தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கலாம்.
மேலும் தற்போதைய பசுமை அளவுகோல்களை அடையாதபோதும் பூஜ்யம் விழுக்காடு கரிம வெளிப்பாட்டை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கும் நிதியுதவி கிடைக்கும்.
துபாயில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காப்28 பருவநிலை மாநாட்டில், சிங்கப்பூர் நாணய ஆணையம், டிசம்பர் 3ஆம் தேதி ‘த சிங்கப்பூர் ஏஷியா டெக்சோனோமி’ எனும் புதிய திட்டத்தை அறிவித்தது.
அப்போது பேசிய சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன், “சூரிய சக்தித் தகடுகளுக்கும் காற்றாலைகளுக்கு மட்டும் பசுமை நிதி தேவைப்படுவதில்லை. மாறாக, பசுமை நடவடிக்கைகளுக்கு இன்னும் முழுமையாக மாறாத வர்த்தகங்களுக்கும் துறைகளுக்கும் நிதியாதரவு தேவைப்படுகிறது.
“அந்த நிதியாதரவின் உதவியோடு அந்த வர்த்தகங்களும் துறைகளும் தூய்மையான தொழில்நுட்பங்களை மேற்கொண்டு, தங்கள் எரிசக்தி சேமிப்பு ஆற்றலை மேம்படுத்தி, காலப்போக்கில் பசுமை நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட முடியும்,” என்றார்.
“மாற்றத்தை வரையறுத்தல் என்பது குறிப்பாக ஆசியாவில் முக்கியமானது. அங்கு பொருளியல் மேம்பாடு, மக்கள்தொகை வளர்ச்சி, உயர்ந்துவரும் எரிசக்தி தேவைகள் ஆகியவற்றுக்கு இடையே, பூஜ்யம் விழுக்காடு கரிம வெளிப்பாட்டை நோக்கிய பொருளியலின் முற்போக்கான மாற்றமும் இடம்பெற்று வருகிறது,” என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அறிக்கை தெரிவித்தது.
“நிலையான, இடைநிலை நிதியளித்தலைத் தெளிவுப்படுத்துவது முக்கியம். அது பசுமையல்லாத அல்லது பசுமையை நோக்கிச் செல்லாத திட்டங்களுக்கு நிதியளித்தலைத் தவிர்க்கும். அவ்வாறு நிதியாதரவைப் பெற விரும்பும் வர்த்தகங்களும் துறைகளும் கிடைக்கும் நிதியைக் கொண்டு எப்படிப்பட்ட பசுமைத் திட்டங்களில் தாங்கள் ஈடுபடுகிறார்கள் என்றும் அந்தத் திட்டங்கள் உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவையா என்று தெளிவாக விளக்க வேண்டும்,” என்றும் ஆணையம் விளக்கியது.
தொடர்புடைய செய்திகள்
நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களைப் படிப்படியாகக் குறைத்தல் போன்ற இடைநிலை நடவடிக்கைகள் தற்போதைய பசுமை மாறுதலுக்கு உதவ முடியாது. மாறாக, அது பூஜ்யம் விழுக்காடு கரிம வெளிப்பாட்டை நோக்கிய பாதையில் செல்கிறது அல்லது பூஜ்யம் விழுக்காடு கரிம வெளிப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவக்கூடியதாக உள்ளது என்றும் ஆணையம் தனது அறிக்கையில் விவரித்தது.
‘த சிங்கப்பூர் ஏஷியா டெக்சோனோமி’ திட்டம் நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களைப் படிப்படியாக மூடும் நடவடிக்கைக்கு நிதி அளிக்கிறது. இது ஆசிய-பசிபிக்கில் எரிசக்தி மாற்றத்துக்கு ஒரு முக்கிய படி. காரணம், மின்சார உற்பத்தியின் 60 விழுக்காடு நிலக்கரியால் சாத்தியமாகிறது.
நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை முதலாளிகள் முன்கூட்டியே மூடும்போது அவர்களுக்கு நிதி அளிக்கப்படுகிறது. அதனைக் கொண்டு தூய்மையான பசுமை எரிசக்தி உறுபத்திக்கு அவர்கள் மாறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

