தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ நெடுந்தொலைவோட்டம்: பலவிதங்களில் அசத்திய பங்கேற்பாளர்கள்

2 mins read
fa5dcf42-cd70-443a-af51-405179b728e6
ஆண்களின் அரை நெடுந்தொலைவோட்டத்தில் தேசிய அளவில் மூன்றாம் நிலையிலும் அனைத்துலக அளவில் நான்காம் நிலையிலும் பதக்கம் பெற்றார் ஜீவனேஷ் செளந்தரராஜா. அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 மணி 15 நிமிடம் 45 வினாடிகள். - படம்: ‘அயர்ன்மேன்’ குழு
multi-img1 of 3

சேலையில் ஓடி சாதித்த இந்தியாவின் பெண்மணி

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ 21.1 கிலோமீட்டர் அரை நெடுந்தொலைவோட்டத்தில் சேலை அணிந்து ஓடி மக்களை வியக்கச் செய்தார் ஸ்வாதி முகுந்த், 35.

டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் நடந்த ஓட்டத்தில், அவரும் அவரது 66 வயது தந்தை சுப்பிரமணியம் மஹாதேவனும் முதன்முறையாகப் பங்குபெற்றனர். இதற்காக அவர்கள் மும்பையிலிருந்து வந்திருந்தனர்.

சேலையில் ஓடி அரை நெடுந்தொலைவோட்டத்தை முடித்த இந்திய நாட்டவர் ஸ்வாதி முகுந்த், 35 (இடது), அவரது தந்தை சுப்பிரமணியம் மஹாதேவன், 66.
சேலையில் ஓடி அரை நெடுந்தொலைவோட்டத்தை முடித்த இந்திய நாட்டவர் ஸ்வாதி முகுந்த், 35 (இடது), அவரது தந்தை சுப்பிரமணியம் மஹாதேவன், 66. - படம்: ரவி சிங்காரம்

“சிங்கப்பூரில் வெப்பம் சற்று அதிகமாகவே இருப்பதால் சிரமமாக இருந்தது. எனினும், ஏற்பாட்டாளர்கள் பல இடங்களில் குளிர்பானங்கள் வழங்கியதால் சமாளிக்க முடிந்தது,” என மும்பையில் ஓடும் அனுபவத்தோடு ஒப்பிட்டார் திரு மஹாதேவன்.

“எந்த உடை நமக்கு வசதியாக இருக்கிறதோ அதிலேயே ஓடலாம் என்பதையும் இந்தியராக, சேலையின் சிறப்புகளைப் பிறருக்குத் தெரியப்படுத்தவும் இவ்வாறு ஓடினேன்.

“இன்று ஓடியவர்கள் பலரும் என்னைப் பாராட்டியது உச்சி குளிரவைத்தது,” என்றார் ஸ்வாதி.

இந்த ஓட்டத்திற்கென செப்டம்பர் முதல் மூன்று மாதம் பயிற்சி செய்த இவர் இதற்கு முன்பு 10 கி.மீ. ஓட்டங்களிலும் சேலையில் ஓடியுள்ளதாகக் கூறினார்.

சிங்கப்பூர் பெருமையை நிலைநாட்டிய சாதனையாளர்கள்

தேசிய அளவில் அரை நெடுந்தொலைவோட்டத்தில் முதல் நிலையில் ஷோன் கோ (நடுவில்), இரண்டாம் நிலையில் ஜான் லிம் (இடது), மூன்றாம் நிலையில் ஜீவனேஷ் செளந்தரராஜா.
தேசிய அளவில் அரை நெடுந்தொலைவோட்டத்தில் முதல் நிலையில் ஷோன் கோ (நடுவில்), இரண்டாம் நிலையில் ஜான் லிம் (இடது), மூன்றாம் நிலையில் ஜீவனேஷ் செளந்தரராஜா. - படம்: ‘அயர்ன்மேன்’ குழு

தேசிய அளவில் 2.4 கி.மீ., 10 கி.மீ. (சாலை) ஓட்டச் சாதனையாளரான 30 வயது ஜீவனேஷ் செளந்தரராஜா, இந்த அரை நெடுந்தொலைவோட்டத்தை முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 1 மணி 15 நிமிடம் 45 வினாடி.

ஆண்கள் பிரிவில் தேசிய அளவில் மூன்றாம் நிலையிலும் அனைத்துலக அளவில் நான்காம் நிலையிலும் வந்த அவர், வெண்கலப் பதக்கத்தையும் $2,000 வெள்ளிக்கான காசோலையையும் பெற்றுக்கொண்டார்.

“15-17 கி.மீ முடிவில் ஓடுபவர்களுக்கிடையே நெரிசல் ஏற்பட்டதால் முன்னணி வகித்தோரைப் பிடிக்கமுடியவில்லை. ஆனாலும் நன்றாக ஓடியதில் மகிழ்ச்சி,” என்றார் ஜீவனேஷ்.

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 5,000 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டங்களில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துவரும் இவர், இனி 2025 தென்கிழக்காசியப் போட்டிகளுக்குத் தகுதிபெறுவதில் தன் முழுக் கவனத்தைச் செலுத்தவுள்ளார்.

ஆண்களுக்கான 42.195 கி.மீ. முழு நெடுந்தொலைவோட்டத்தில், தேசிய அளவில் நான்காம் முறையாக முதல் நிலையில் வந்தார் தேசிய முழு நெடுந்தொலைவோட்டச் சாதனையாளர் சோ ருவி யோங், 32. ஓட்டத்தை முடிக்க இவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 மணி 40 நிமிடம் 34 வினாடி.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாள்கள் நடைபெற்ற ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ நெடுந்தொலைவோட்டத்தில் இவ்வாண்டு 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 44,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஓடிய மொத்தத் தொலைவு, 768,800 கி.மீக்கும் அதிகம். அதாவது நிலவிற்குச் சென்று திரும்பும் அளவைக் காட்டிலும் அதிகம்.

பங்கேற்பாளர்கள், ‘எஃப்1 பிட்’ கட்டடத்தில் தொடங்கி தேசிய விளையாட்டு அரங்கத்தில் ஓட்டத்தை முடித்தனர். 5, 10 கிலோமீட்டர் மற்றும் சிறுவர் ஓட்டங்களும் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்