2024 வரவு செலவு திட்டம் குறித்து உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்க முன்வாருங்கள் என்று பொதுமக்களுக்கு நிதியமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தையும் செலவுகளையும் துறைகளுக்கான ஒதுக்கீடுகளையும் வர்த்தக, மக்கள் உதவிகளையும் பட்டியலிடும் வரவு செலவுத் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இது குறித்து டிசம்பர் 4ஆம் தேதியிலிருந்து 2024ஆம் ஆண்டின் ஜனவரி 26 வரை தனிப்பட்டவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.
ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி வருகிற ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி முடிவடையும் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது.
அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை அளிக்கும் போட்டித்திறன்மிக்க நீடித்த பொருளியல், உலக முதலீடுகளை ஈர்க்கும் நாடு, வளரும் வாய்ப்புகளை கைப்பற்றுதல், உள்ளூர் நிறுவனங்கள் நன்கு செயல்படுவதற்கான ஆதரவு, மாறி வரும் உலகில் வேலைகளை தக்க வைத்தல், வலுவான குடும்பப் பிணைப்பு, சிங்கப்பூரர் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவு, முதியோர்களுக்கு நிறைவான ஓய்வு காலத்தை வழங்குதல், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை கைதூக்கி விடுதல், பாதுகாப்பான, மீள்திறன்மிக்க நாட்டை கட்டியெழுப்புதல், சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு நம்முடைய பங்கு, ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவது, சிங்கப்பூரர்களின் உடனடி மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வது, சமூகம் எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் வகையில் நீண்ட காலத்திற்கு திட்டமிடுதல் போன்றவை பற்றி கருத்துகளை முன்வைக்கலாம்.
சிங்கப்பூர் பட்ஜெட் இணையத் தளம், ரீச் பட்ஜெட் 2024, ரீச் சிங்கப்பூர் ஃபேஸ்புக், ரீச் சிங்கப்பூர் இன்ஸ்டகிராம் கணக்கு, மக்கள் கழகம் போன்ற வழிகளில் கருத்துகளை பதிவு செய்யலாம்.