சிங்கப்பூரில் சரக்கு விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்த $670 மில்லியன் முதலீடு செய்யும் ‘மியர்ஸ்க்’

1 mins read
d260129d-c5af-4532-81e8-73d102c1daac
கொள்கலன் கப்பல் போக்குவரத்துக்கான தேவை குறைந்து வருவதுடன் மியர்ஸ்க் அதன் முதலீட்டுத் திட்டங்களை இரு ஆண்டுகளுக்குக் குறைக்கவும் உள்ளது. இதற்கிடையே, இந்த அறிவிப்பு வந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

கப்பல் போக்குவரத்து, தளவாடச் சேவைகள் வழங்கும் ஏ.பி.மொல்லர்-மியர்ஸ்க் நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலரை (S$670 மி.) முதலீடு செய்து தென்கிழக்காசியாவில் அதன் விநியோகத் தொடரை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் உள்ளது.

வட்டாரத்தின் வளர்ந்துவரும் பயனீட்டு ஆற்றலையும் உற்பத்தி நடவடிக்கைகளையும் மூலதனமாக்கிக்கொள்ள நிறுவனம் இந்தத் திட்டத்தில் இறங்கியுள்ளது.

கொள்கலன் கப்பல் போக்குவரத்துக்கான தேவை குறைந்துள்ள நிலையில் மியர்ஸ்க் அதன் முதலீட்டுத் திட்டங்களை 2023, 2024 ஆண்டுகளில் குறைத்தும் உள்ளது. இருப்பினும், இதற்கிடையே இந்தத் திட்டத்தை அது செயல்படுத்த உள்ளது.

மியர்ஸ்க் சரக்குக் கிடங்குகளின் ஆற்றலை அடுத்த மூன்று ஆண்டுகளில் விரிவுபடுத்தி நிறுவனத்தின் கடல், வான், நிலக் கட்டமைப்புகளை ஆதரிக்க நிதிகள் பயன்படுத்தப்படும்.

இதன்படி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் 2026ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 480,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கூடுதலாக்க மியர்ஸ்க் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

மியர்ஸ்க் அதன் விமானச் சரக்கு வர்த்தகத்திற்கு ஆதரவாக வட்டார விமானப் போக்குவரத்து மையம் ஒன்றை சிங்கப்பூரில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால், சாங்கி விமான நிலையத்தில் மியர்ஸ்க் அதன் கிடங்கின் அளவை விரிவுபடுத்தும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிறுவனத்தின் முதலீடுகளால் சிங்கப்பூரில் கணிசமான எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம் என்று அதன் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

தென்கிழக்காசியாவில் தற்போது 5,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கிவருகிறது, மியர்ஸ்க்.

குறிப்புச் சொற்கள்