தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களில் செர்டிஸ் அதிகாரிகள் சந்திக்கும் வசைபாடுதல்

3 mins read
3af34cee-98d7-4134-be7b-4f06eca2503a
செர்டிஸ் துணைக் காவல் படை அதிகாரி முகம்மது ரெதுவானும் (இடது) பாதுகாவல் மேலதிகாரி சேமி லீயும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பாதுகாவல் பணியை மேற்கொள்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அக்டோபர் மாத இறுதியில், முரட்டுத்தனமான ஆடவர் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவிலிருந்து வெளியேற முயன்றபோது அவரைத் தடுத்து நிறுத்த செர்டிஸ் அதிகாரிகள் இருவர் முயன்றனர். அப்போது அவர்கள் இருவரையும் அந்த ஆடவர் தாக்கியதாகக் கூறப்பட்டது.

“மிகவும் ஆத்திரமடைந்த அந்த ஆடவர் அதிகாரிகளை வசைப்பாடியதுடன் அவர்களை மிரட்டவும் செய்தார்,” என்று பாதுகாவல் மேலதிகாரி சேமி லீ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அவர் இந்தச் சம்பவத்தை அம்மருத்துவமனையில் உள்ள பாதுகாவல் கண்காணிப்பு அறையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செர்டிஸ் துணை காவல்படையில் பணியாற்றும் திரு லீ, கூடுதல் அதிகாரிகளை அவ்விடத்துக்கு அனுப்பியதுடன் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்.

“பருத்த உடல்வாகுடைய அந்த ஆடவர், அங்கிருந்த அதிகாரிகள் இருவரையும் தாக்கினார். ஆடவர் அதிகாரி ஒருவரின் முகத்தில் ஒரு குத்து விட்டதில் அதிகாரியின் உதட்டில் வெட்டுக் காயம் ஏற்பட்டதுடன் அவரது மூக்குக்கண்ணாடியும் இரு துண்டுகளாக உடைந்தது. மற்றோர் அதிகாரியின் கால்களுக்கு இடையே ஆடவர் உதைத்தார்.

“அப்போது மருத்துவமனை ஊழியர்கள் சிலர், தாதிகள் ஆகியோரும் அந்த ஆடவரைத் தரையில் கிடத்த முயன்றனர். அந்தச் சமயத்தில் கூடுதல் காவல் படை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் வந்துவிட்டனர். அவர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்,” என்றார் திரு லீ.

சிங்கப்பூரில் உள்ள சுமார் 40 சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களிலும் வசதிகளிலும் 350க்கு மேற்பட்ட செர்டிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், வருகையாளர்கள் ஆகியோரைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

முன்களச் சேவைப் பணியாளர்களுடன் காவல்படை அதிகாரிகள் பணியாற்றுவர். மேலும் சிரமமான சூழ்நிலைகளில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

“சராசரியாக, நமது பாதுகாவல் அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 1,000 சம்பவங்களைக் கையாளுகின்றனர். அது நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 சம்பவங்களுக்கு இடைப்பட்டதாகும். ஆக, நமது அதிகாரிகளுக்கு எதிராக வசைப்பாடுதலும் தாக்குதலும் இயல்பான ஒன்றாகி விட்டது,” என்றார் செர்டிஸ் குழுமத்தின் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த உதவித் தலைவர் திரு ராபின் கோ.

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் உள்ள தாதியர், மருந்தாளர்கள், இதர ஊழியர்கள் ஆகிய மூவரில் ஒருவர் வாரத்துக்குக் குறைந்தது ஒரு முறையாவது துன்புறுத்தலுக்கு ஆளாகிறார் அல்லது துன்புறுத்தலுக்கு மற்றொருவர் ஆளாவதைப் பார்த்திருக்கிறார் என்று ஆய்வுகளும் குவிநோக்கு கலந்துரையாடல்கள் மூலமாகவும் தெரிந்துள்ளது.

அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைத் துன்புறுத்துதல் மற்றும் தொல்லை கொடுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கும் முத்தரப்புப் பணிக்குழு அண்மையில் அந்தச் செயல்களுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.

அந்த வகையில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைத் துன்புறுத்தும் அவசர சிகிச்சை தேவைப்படாத நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையின் கவனிப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அதே செயலைப் புரியும் நோயாளியின் பராமரிப்பாளர்களும் வருகையாளர்களும் அடுத்த முறை நோயாளியை்ப பார்க்க மருத்துவமனைக்கு வரும்போது தடுத்து நிறுத்தப்படுவர்.

மருத்துவக் கழகங்களில் பணியமர்த்தப்படும் தனது அதிகாரிகள் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் வகையில் அவர்களுக்கு தகுந்த, விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது என்று செர்டிஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்பாதுகாவலர்